ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமானவரித் துறை 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் செலவைக் கண்காணிக்க வருமானவரி (புலனாய்வுப் பிரிவு) தலைமை இயக்குநரகத்தின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.
இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமானவரி (புலனாய்வு) தலைமை இயக்குநரகம் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் தகவல்களை இந்தக் கட்டுப்பாட்டு மையம் பெற்றுக்கொள்ளும்.
மேலும், இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “இடைத்தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய பெருமளவிலான ரொக்கம், ஆபரணங்கள் மற்றும் இதர விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தாலோ, எடுத்துச்செல்லப்பட்டாலோ அதுபற்றிய தகவல்களை தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.” என்று தெரிவித்து கட்டுப்பாட்டு மைய தொடர்பு எண்களை அறிவித்துள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800 425 6669
மின்னஞ்சல் : itcontrol.chn[at]gov[dot]in
வாட்ஸ் அப் எண் : 94453 94453