தாமரை கண்டிப்பா மலரும்; பிரதமர் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சிகள் அமளி!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். ஆனால் அவரை பேச விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குரலெழுப்பி கொண்டே இருந்தனர். ஆனால் பிரதமர் மோடி கண்டுகொள்ளவே இல்லை.

ஒட்டுமொத்த வளர்ச்சி

தனது பேச்சை தொடர்ந்த பிரதமர், நடப்பு கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடும் மிகவும் முக்கியமானதாக கவனித்து வருகிறது. ஆனால் சில உறுப்பினர்களின் பேச்சும், அறிக்கைகளும் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கின்றன. நான் 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற போது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளை, சிக்கல்களை
காங்கிரஸ்
ஏற்படுத்தி வைத்திருந்தது.

தாமரை மலர்ந்தே தீரும்

இந்த நாடு சந்தித்து வந்த எண்ணற்ற பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் தீர்வு காணவே இல்லை. ஆனால் பாஜக அப்படியில்லை. நாடு தற்போது சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண முயற்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சிகள் எவ்வளவு தான் சேற்றை வாரி இறைத்தாலும் சரி. தாமரை மலர்ந்தே தீரும் என்று கூறினார். இதற்கிடையில் அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தனர்.

காங்கிரஸ் ஏற்படுத்திய தடை

தொடர்ந்து பேசிய மோடி, காங்கிரஸ் கட்சியின் அவலநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியாவில் அக்கட்சியின் கணக்கை பாஜக முடித்து வைத்துவிட்டது. நாட்டின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் பல்வேறு தடைகளை உருவாக்கியது. கடந்த 60 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை இந்தியா தவறவிட்டுள்ளது. சிறிய நாடுகள் கூட முன்னேறி சென்றுவிட்டன. கடந்த 3, 4 ஆண்டுகளில் 11 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஜன் தன் கணக்குகள்

சாமானியர்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஜன் தன் கணக்கு இயக்கத்தை தொடங்கினோம். கடந்த 9 ஆண்டுகளில் 48 கோடி ஜன் தன் கணக்குகள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி பெயரளவிற்கு மட்டுமே செயல்பட்டு இந்த நாட்டை தோல்வி பாதைக்கு தள்ளிவிட்டுள்ளது. நாடு சந்திக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு முன்னேற்றி செல்ல முயற்சி செய்யவே இல்லை.

எல்.பி.ஜி இணைப்புகள்

எங்களின் முதன்மையான நோக்கம் என்பது சாமானியர்கள் நலன். இதன் காரணமாகவே 25 கோடி குடும்பங்களுக்கு எல்.பி.ஜி இணைப்புகள் கிடைக்குமாறு செய்தோம். மத்திய அரசு மதச்சார்பின்மையை கடைபிடித்து வருகிறது. எங்கள் இலக்கு அனைத்து விதமான பிரிவினைவாதத்தையும் நீக்குவதே ஆகும். குறிப்பாக பழங்குடியின மக்களின் முன்னேற்றத்தை காங்கிரஸ் பறித்து விட்டது.

அதற்கான பலனை தான் தற்போது அனுபவித்து வருகின்றனர். நம்முடைய புதிய பட்ஜெட் அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு பலவிதமான வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.