ஹைதராபாத்தில் சஞ்சய் காந்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ் (28) என்பவரும், ரேணுகா என்ற பெண்ணும் கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நிலையில், சுரேஷ் கொலைசெய்யப்பட்டு, அவரின் உடல் பாலீதீன் பையில் சுற்றி வீசப்பட்டிருந்தது. இது தொடர்பாக, காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது. மேலும், விசாரணையில் அவரின் மனைவி ரேணுகா மீது சந்தேகம் வலுத்தது. அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்திய காவல்துறைக்கு பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
அது தொடர்பாக காவல்துறை தரப்பு ,” சுரேஷின் மனைவி ரேணுகா மதுவுக்கு அடிமையானவர். அவர் பெரும்பாலும் மதுக்கடையில்தான் இருப்பார். இந்த நிலையில், அவருக்கு மதுக்கடையில் அநாதையான ஒரு பெண் அறிமுகமாகியிருக்கிறார். அந்தப் பெண்ணுக்கு ஆதரவளிக்கும் எண்ணத்தில் தன்னுடைய கணவனுக்கே இரண்டாவது திருமணம் செய்து வைத்திருக்கிறார். மூவரும் ஒரே வீட்டில் 15 நாள்கள் வசித்து வந்திருக்கிறார்கள். சுரேஷ் கொஞ்சம் கொஞ்சமாக ரேணுகாவை விட்டு விலக தொடங்கியிருக்கிறார். அதனால் அடிக்கடி சண்டை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மூவரும் சேர்ந்து மது அருந்தியிருக்கின்றனர். மது போதையில் சுரேஷ் தூங்கியதையடுத்து, சுரேஷின் இரண்டாவது மனைவியின் உதவியுடன் ரேணுகா, அவரின் கழுத்தில் சால்வையை சுற்றி இறுக்கியிருக்கிறார். இதனால் சுரேஷ் உயிரிழந்திருக்கிறார். உடனே அவரை பாலீதீன் பையில் சுற்றி வீட்டு மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார்கள். அதன் பிறகு கணவனை யாரோ கொலைசெய்து வீட்டுக்கு முன்னால் உடலை வீசிவிட்டு சென்றதாகத் தெரிவித்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைதுசெய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறோம்,” எனத் தெரிவித்திருக்கிறது.