ஈரோடு: ஈரோட்டில் அதிமுக தேர்தல் பணிமனை பேனர் 4-வது முறையாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் நிலையில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியவர்களின் படங்களுடன் அதிமுக பேனர் வைத்துள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வேட்பாளர் தென்னரசு என பேனரில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே 3 முறை மாற்றி அமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பேனர்களில் மோடி, அண்ணாமலை படங்கள் இடம்பெறவில்லை.
கடந்த 3 முறை வைக்கப்பட்ட பேனர்களின் இவர்கள் படங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில் தற்போது 4-வது முறையாக அவர்களுடைய படங்களை சேர்த்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 பேனர்களில் கூட்டணியின் பெயரை குறிப்பிட்ட அதிமுக இந்த முறை பேனரில் கூட்டணியின் பெயரை குறிப்பிடவில்லை. தற்போது பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படங்கள் இடம்பெற்றிருந்தாலும் கூட்டணி பெயரை பேனரில் குறிப்பிடவில்லை.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனவரி 31-ம் தேதி முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்து வருகிறார்கள். இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. இன்று வேட்பு மனுக்களுக்கான பரிசீலனை நடைபெறுகிறது. இன்று மாலைக்குள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.