புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு மேலும் இரண்டு நீதிபதிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ராஜேஷ் பிண்டால், குஜராத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் அரவிந்த் குமார் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவதாக சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது ட்விட்டர் பக்கத்தில்,” இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின் படி, குடியரசுத்தலைவர் பின்வரும் இரண்டு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமித்துள்ளார். அவர்களுக்கு என் வாழ்த்துகள். அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டால், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கொலீஜிம் பரிந்துரை செய்திருந்த 5 உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக கடந்த திங்கள்கிழமை (பிப்.6) தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தலைமை நீதிபதி உட்பட உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டும். முன்பு 27 நீதிபதிகளே இருந்தனர். திங்கள்கிழமை ஐந்து புதிய நீதிபதிகள் பதவி ஏற்ற நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது.
இதையடுத்து மீதமுள்ள 2 இடங்களுக்கும் 2 நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது. அதன்படி, 2 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உச்ச நீதிமன்றம் இனி முழு நீதிபதிகளின் எண்ணிக்கையுடன் செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.