"அதிமுக எந்த கட்சியை நம்பியும் இல்லை" எடப்பாடி பழனிசாமியின் பஞ்ச்..!

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார் என தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு தண்ணீர் வசதிகூட திமுக அரசு செய்து தரவில்லை. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலையை இந்த அரசு வழங்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கூறினார்.

“தமிழக முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது டெல்டா மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்ட போது ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்த நிலையில், தற்போது எக்டேருக்கு 20,000 மட்டுமே வழங்கியுள்ளார். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஒரு பேச்சு ஆளுங்கட்சியாக இருந்தபோது ஒரு பேச்சு என தமிழக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தாததால் ஈரோடு மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். தேர்தல் அறிக்கை ஒன்றைகூட திமுக செயல்படுத்தவில்லை. 

பல கட்சிகளுக்கு  அதிமுக உதவிகரமாக இருப்பதோடு தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது. பாஜக எங்களுடன் தான் கூட்டணியில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் இருந்தாலும் பாஜகவுடனான கூட்டணி தொடரும். திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவிற்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார்கள். விரைவில் அந்த கட்சிகள் காணாமல் போய்விடும். மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளுக்கு திமுக கூட்டணி கட்சியில் உள்ள கட்சிகள் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதில் தவறில்லை. எழுதாத பேனாவை 80 கோடி செலவில் கடலில் வைப்பதை தவிர்த்து விட்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம். ஒரு கோடி ரூபாய்க்கு பேனாவை நினைவு வைத்துவிட்டு மீதமுள்ள 79 கோடி ரூபாய் பணத்தில் மாணவர்களுக்கு எழுதக்கூடிய பேனாவை வழங்கலாம்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.