விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி டெய்சி. இவருக்கு, சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அதே கிராமத்தைச் சேர்ந்த சத்துணவு பொறுப்பாளராக பணிபுரிந்து வரும் எமிலிமேரி, 4 பவுன் நகையை வாங்கியுள்ளார். இதையடுத்து, வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்த எமிலிமேரியிடம், வேலைக்காக தான் கொடுத்த நகையை திருப்பிக் கொடுக்குமாறு, டெய்சி கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுத்து, ஏமாற்றி வந்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி டெய்சி தனது குழந்தைகளுடன், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்றபோது, எமிலிமேரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து, டெய்சியை மானபங்கப்படுத்தி, அவர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி, கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் அதில் கோர்த்திருந்த 5 பவுன் நகைகளை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, எமிலிமேரி மீது, கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் டெய்சி புகார் மனு அளித்துள்ளார். ஆனால், அந்த மனு மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி டெய்சி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது, டெய்சி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர், திடீரென கேனில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் ஓடிவந்து, மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி, அனைவரையும் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.