திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகர காவல் நிலையம் அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க அறை உள்ளது. இந்த அறைக்கு முன்பு வழக்கறிஞர் டி.கிருஷ்ணன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வழக்கம் போல் நிறுத்திவிட்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது, வழக்கறிஞர் அறை முன்பு திடீரென நெருப்பு பற்றி எரிவதை பார்த்த நீதிமன்ற உதவியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. உடனே நீதிமன்ற ஊழியர்கள் தண்ணீர் மற்றும் மண்ணைக் கொண்டு தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் வழக்கறிஞர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனே அவர்கள் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது அந்த இருசக்கர வாகனம் வழக்கறிஞர் டி கிருஷ்ணன் என்பவருடையது என்று தெரியவந்தது.
அதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்ட போது ஒருவர் சிறிய பெட்ரோல் கேன் கொண்டு சென்று இருசக்கர வாகனத்தின் மீது ஊற்றி பற்ற வைப்பதும், அந்த நபர் மெயின் கேட்டு வழியாக செல்வதும் பதிவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, வழக்கறிஞர்கள் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது