பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாட உலகம் முழுவதும் இப்போதே இளம் தலைமுறையினர் தயாராகி வருகின்றனர். அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமின்றி, இந்தியாவிலும் கூட பெரு நகரங்கள் தாண்டி கிட்டத்தட்ட நாட்டின் எல்லா இடங்களிலும் பரவலாக காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காதலை வெளிப்படுத்துவது, காதல் ஜோடிகள் பரிசுகளை பரிமாறிக் கொள்வது வழக்கமான ஒன்று.
காதலர் தினத்திற்கு இந்தியாவில் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர காணப்படுகிறது. காதலர் தினம் மேற்கத்திய கலாசாரம், அதை புறந்தள்ள வேண்டும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர்.
“இல்லவே இல்லை, காவிய காலம் தொட்டு காதல் இருந்து வருகிறது, அதை வெளிக்காட்டும் நாள்தான் காதலர் தினம்” என்று இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம், உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ம் தேதியை பசுக்களைக் கட்டிப்பிடிக்கும் தினமாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தது. இந்த அறிவிப்பின்படி, பசுக்களைக் கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாடுவது நேர்மறை ஆற்றலை பரப்பும், கூட்டு மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகளும், நெட்டிசன்களும் இணையத்தில் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு வரவேற்பும், விமர்சனங்கள் எழுந்த நிலையில், இன்று அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.