லக்னோ: சர்வதேச முதலீட்டாளர்கள் (2023) மாநாடு உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நேற்று தொடங்கியது. நாளை வரை நடைபெறும் இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
உத்தர பிரதேசம் (உ.பி) இன்று உலகிற்கு நம்பிக்கை ஒளியாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் உ.பி முக்கிய பங்காற்றி வருகிறது.
குறிப்பாக, கடந்த 4-5 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சியையும், நிலையான முன்னேற்றத்தையும் உ.பி.சாத்தியமாக்கியுள்ளது. மேலும், டிஜிட்டல் உள்கட்டமைப்புகளை அதிகரிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையால் பெரிய பலன் கிடைத்துள்ளது.
சீர்த்திருத்த நடவடிக்கைகள் நிர்பந்தத்தால் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்துவதில்தான் அரசு கவனம் செலுத்திவருகிறது. இரட்டை என்ஜின் வளர்ச்சிக்கு உ.பி.யை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம்பிர்லா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் முன் னெடுத்த பல்வேறு திட்டங்களை அவர்கள் பாராட்டி பேசினர்.