வாஷிங்டன்- அமெரிக்கா, ‘ஹெச்1பி விசா’ நடைமுறையில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பெரியளவில் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கணினி மென்பொருள், தொழில்நுட்பம் உட்பட குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அமெரிக்கா சென்று பணியாற்ற, ஹெச்1பி விசாவை அந்நாட்டு குடியேற்றத் துறை வழங்குகிறது.
சிக்கல்கள்
இந்த விசாவை, நம் நாட்டினரும், சீனர்களும் தான் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலத்தில், ஹெச்1பி விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், நம் நாட்டினர் உள்ளிட்ட வெளிநாட்டினர் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர்.
இந்நிலையில், ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றதை அடுத்து, கடந்த சில மாதங்களாக, இந்த விசா செயல்பாட்டு முறையை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹெச்1பி மற்றும் எல் 1 விசா செயல்பாட்டு முறைகளில் புதிய நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரி கூறியதாவது:
கடந்த 2004 முதல் அமலில் உள்ள விதிகளின் படி, ஹெச்1பி விசாவை புதுப்பிக்க வேண்டுமென்றால், அதை வைத்திருப்பவர்கள்,தங்கள் சொந்த நாடு செல்ல வேண்டும்.
பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை, துாதரகத்தில் நேரில் சமர்ப்பித்து, விசாவைப் பெற பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.
![]() |
இரண்டு ஆண்டுகள்
அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்கும் சூழல் நிலவியது. இந்நிலையில், புதிய நடவடிக்கை வாயிலாக, உள்நாட்டிலேயே விசாவை புதுப்பிக்கும் முறை பரீட்சார்த்த முறையில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் துவக்கப்படும் இந்த முன்னோடித் திட்டம், முழுமையாக செயல்படுத்தப்படும் போது, அமெரிக்காவில் உள்ள பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பயன்பெறுபவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்