தாம்பரம் – கிருமி நாசினி தெளிப்பதில் இபிஎஸ் ஆட்சியில் முறைகேடு! விசாரணை தள்ளி வைப்பு!

கொரோனா தொற்று காலத்தில் தாம்பரம் மாநகராட்சியில் கிருமிநாசினி தெளிப்பதில் நடந்த பல லட்சம் ரூபாய் முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை, கவுரிவாக்கத்தைச் சேர்ந்த மக்கள் பசுமை இயக்க நிறுவனத் தலைவர் நாஞ்சில் சி.மனோகரன் தாக்கல் செய்த மனுவில், கொரோனா தொற்று பரவல் காலத்தில் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிப்பது போன்ற சுகாதார பணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் 2019-20, 2020-21ம் ஆண்டுகளில் கிருமிநாசினி தெளிக்க எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது, எந்தெந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என விவரம் கேட்டு மூன்று முறை தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்ததாகவும், அதன்படி வழங்கிய தகவலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

கிருமிநாசினி தெளிக்கும் பணிக்கு எந்த ஒப்பந்தமும் வழங்காமல், அரசு நிதி சுரண்டப்பட்டுள்ளதால், இதுசம்பந்தமாக சுதந்திரமான விசாரணை குழுவை நியமித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.