அண்ணாமலை தேர்தலில் போட்டியிட பயந்து ஓடிவிட்டார் – மாணிக்கம் தாக்கூர் எம்.பி

விருதுநகர் மாவட்டம், செவல்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் ஆகியவற்றை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசும்போது, “மத்திய அரசு அறிவித்துள்ள  பட்ஜெட்  பொது மக்களுக்கு ஏமாற்றம்  தரக்கூடிய பட்ஜெட் ஆகவும், நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அதானிக்கான பட்ஜெட்டாக இருக்கிறது. 

இந்த பட்ஜெட் 100 நாள் வேலை வாய்ப்பை நம்பி இருக்கக்கூடிய ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடிய பட்ஜெட்டாக இருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஏறக்குறைய 9000 கோடி ரூபாயை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறைத்திருக்கிறார். ஏழை எளிய மற்றும் உழைப்பவர்களின் வலியைப் பற்றி சிந்தனை இல்லாத பட்ஜெட். மோடி அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக தங்களுடைய கடும் உழைப்பை அதானியை 609-வது இடத்திலிருந்து உலகத்தினுடைய இரண்டாவது பணக்காரராக முன்னேற்றுவதற்கு உழைத்து இருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக சார்பில்  தலைவர் அண்ணாமலை அவர்கள் போட்டியிட பயந்து இலங்கைக்கு பயணம் சென்றுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அதிமுவை சசிகலா அணி, தினகரன் அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என நான்கு கூறுகளாக்கிய பங்கு பாஜகவை சாரும்” என்றும் சாடினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.