சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு இறுதியில் துவங்கி, 2028-ல் முடிக்கப்படும் என ஜப்பான் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “2015-16-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அறிவித்தது. 2018-ல் மதுரையில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிலத்தினை அதிமுக அரசு உரிய நேரத்தில் வழங்கியது.
ஆனால், மத்திய அமைச்சர், நிலம் வழங்குவதில் தாமதம் ஆகியது என்று தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் தொடர்பாக பிரச்சினை இல்லை. ஆனால், மத்திய அரசு அதனை மட்டுமே தெரிவித்து வருகிறது. நிலம் வழங்கப்பட்டதால் மட்டுமே சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது
தற்போது 100 மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகின்றனர். மருத்துவ சேவை வழங்கும் பட்சத்தில் மட்டுமே எய்ம்ஸ் வந்ததாக அர்த்தம். தமிழகத்திற்கு அறிவித்த அதேநேரத்தில்தான் அசாம், காஷ்மீர், ராஜஸ்தான், ஜெய்பூர், தெலங்கானா போன்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தமிழகத்திற்கு மட்டும் நிதி வழங்குவதில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. அதிமுக அரசு கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற்றிருந்தால் தற்பொழுது எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வந்திருக்கும்.
தமிழகத்தில் கோவை, மதுரை, கீழ்ப்பாக்கம் போன்ற 3 இடங்களில் ரூ.1388 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள், ஜப்பான் பன்னாட்டு நிதியின் கீழ் நடைபெற்றவருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் வழங்காமல், ஜப்பான் நிதி உதவி மருத்துவதுறையில் தமிழகத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பிற்கு ஜப்பான் பயணத்தின்போது நிதி கோரப்பட்டது.
மதுரை எய்ம்ஸ்க்கும் நிதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்த ஜெய்க்கா அமைப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டமைப்புக்கு ஏப்ரலில் தான் டெண்டர் பணி நடைபெறும். 2024 இறுதியில் தான் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கும். 2028-ல் தான் எய்ம்ஸ் பணிகள் முடிவடையும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது” என்று அமைச்சர் கூறினார்.
முன்னதாக, மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, திமுக எம்.பி.க்கள் இடையே நேற்று காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அதன் விவரம்: மதுரை எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமைச்சர் – திமுக எம்பிக்கள் காரசார விவாதம்