ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்; தமிழக அரசின் குட் நியூஸ்

Ration card update: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்கு கட்டுவதற்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் சென்னையில் இருந்து அடிக்கல் நாட்டினார். இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர்  தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நெல் மூட்டைகள் மழையால் நனையாமல் இருப்பதற்காக ரூ.238 கோடி மதிப்பீட்டில் 2,86,350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 106 இடங்களில் சேமிப்பு கிடங்குகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழத்தின் சார்பில் 12 வட்ட கிடங்கு அமைக்கப்பட உள்ளது. இதில் கொல்லிமலையில்
ரூ.5 கோடி மதிப்பீட்டில் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குக்கு  முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.

தமிழகத்தில் நேரடி கொள்முதல் நிலையங்கள் 80 இடங்களில் அமைக்க தலா ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் நபார்டு வாங்கி மூலம் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. நியாய விலை கடைகளில் பயோமெட்ரிக் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர். முதியவர்கள், மாற்று திறனாளிகள் ரேஷன் கடைகளில் யார் பொருட்கள் வாங்க வேண்டுமென யாரை பரிந்துரை செய்கிறார்களோ மாவட்ட  வழங்கல் அலுவலர்கள் முடிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயோமெட்ரிக்யோடு, கண் கருவிழி மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக முழுவதும் 35 ஆயிரம் நியாய விலை கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது . விரைவில் இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் நியாய விலைக்கடைகள் மூலம் பொதுமக்களுக்கு ராகி உட்பட சிறுதானியங்கள் வழங்குவதற்காக  நேரடி ராகி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு ராகி கிலோ ஒன்றுக்கு 35.60 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விரைவில் தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ராகி மாவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.