கடும் பனிப்பொழிவால் நேரில் செல்ல முடியாததால் மருத்துவர்கள் அறிவுரைப்படி வாட்ஸ் அப் வீடியோ காலில் வெற்றிகரமாக பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் குப்வாரா மாவட்டத்தில் கரேன் என்ற பகுதியில் வசிக்கும் ஷாஹிதா ஹமீத் என்ற நிறைமாத கர்ப்பிணிகக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
முதலில் அவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். ஆனால் பெண்ணுக்கு பல்வேறு உடல்நிலை பாதிப்புகள் இருந்ததால், பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டது. எனவே மாவட்ட மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கடும் பனிப்பொழிவு காரணமாக சாலை மார்க்கமாகவோ, ஹெலிகாப்டர் மூலமாகவோ பயணம் செய்யும் சூழல் அங்கு இல்லை. இதனையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த பொது மருத்துவர் குப்வாராவில் உள்ள மகப்பேறு நிபுணரான மருத்துவர் பர்வீஸ் அகமதை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டார்.
வாட்ஸ் ஆப் மூலம் அறிவுரை சொல்கிறேன், பிரசவம் பாருங்கள் என மருத்துவர் கூற, அதே போல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த மருத்துவர் அர்ஷத் பிரசவம் பார்த்தார். இதையடுத்து பெண்ணுக்கு சுகப் பிரசவம் மூலம் பெண் குழந்தை பிறந்தது.
தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவ குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
newstm.in