நம் மரபில் ஒன்பது கோள்கள் வழிப்பாட்டுக்கு உரியதாக இருக்கின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கோள்களும் ஜோதிட சாஸ்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஜோதிடத்தின் அடிப்படையில் இந்த ஒன்பது கோள்களும் பூமியில் வாழும் ஒவ்வொரு ஜீவ ராசிகள் மீது ஒரு குறிப்பிட்ட விதமான ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது நம்பிக்கை.
இதில் சொல்லப்பட்டிருக்கும் ஒன்பது கிரகங்களும் தனக்கென பிரத்யேகமான குணாம்சங்களை கொண்டுள்ளன. நவகிரக வழிபாடு என்பது நம் பாரதத்தில் மிக தொன்மையான பழக்கமாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் நவ கிரகங்களை தனித்தனியே வழிபட்ட பழக்கம் இருந்தது. பின்னாளில் வந்த பல்லவர்கள் மற்றும் சோழர்களின் காலத்தில் தான் உயரமான மேடை அமைத்து அதில் நவகிரகங்களையும் பிரதிஷ்டை செய்து, நவகிரகங்களை ஒன்றாக வழிபடும் பழக்கம் வந்தது. இந்த முறையை தற்போதுள்ள பெரும்பாலான சிவாலயங்களில் நாம் காண முடியும்.
அதனடிப்படையில் நவகிரக கோயில்கள் என்பது தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. சனி பகவானுக்குரிய கோவிலான சனீஸ்வரர் கோவில் தவிர்த்து மற்ற 8 கோவில்களும் தமிழகத்தில் அமைந்துள்ளன. ஜோதிட ரீதியான பரிகாரங்கள் மேற்கொள்ளவும், கிரகங்களின் ஆசியை பெறவும் மக்கள் ஒரே நேரத்தில் ஒன்பது கோவில்களுக்கும் சென்று நவகிரக வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
அதன்படியே. நவகிரக தலங்களில் முதன்மையான கோவிலாக விளங்குவது சூரியனார் கோவில். சூரியனுக்கு உகந்த தலம். தஞ்சாவூர் மாவட்டத்தில், ஆடுதுறையில் அமைந்துள்ளது இந்த கோவில்.
அடுத்து, நவகிரக தலங்களில் சந்திரனுக்கு உரிய தலமாக இருப்பது திங்களூர் கைலாசநாதர் கோவில். கும்பகோணத்தில் இருந்து 33 கி.மீ தொலைவில் திருவையாற்றில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த தலம் அப்பூதி அடிகள் நாயனாரின் அவதார தலம் என்பது சிறப்புக்குரியது.
செவ்வாய்க்குரிய தலமாக இருப்பது வைத்தீஸ்வரன் கோவில். இந்த தலம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது. இங்கு செவ்வாய் அங்காரகன் என்று திருப்பெயரில் அருள் பாலிக்கிறார்.
புதனுக்குரிய தலமாக இருப்பது திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருத்தலம். சிவபெருமான் 1008 தாண்டவங்கள் புரிந்த தலம் இது என்பதால் ஆதி சிதம்பரம் என்றழைக்கப்படுகிறது.
அடுத்து குரு பகவானுக்கு உரிய தலமாக இருப்பது ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில். திருவாரூரில் வலங்கைமான் பகுதியில் அமைந்துள்ளது இக்கோவில். குரு பெயர்ச்சியின் போது இங்குள்ள தட்ஷிணாமூர்த்தியை வழிபடுவது மிக நல்ல பலன்களை கொடுக்கும்.
அடுத்து சுக்கிரனுக்குரிய தலமாக இருப்பது கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயம். இங்கு சிவபெருமானே சுக்கிரனாக காட்சி தருவதால், சுக்கிரனுக்கு என்று தனி சந்நிதி இல்லை. இந்த திருத்தலம் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் அமைந்துள்ளது
சனி பகவானுக்கு உரிய தலமாக இருப்பது திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில். இது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ளது. இங்கு சனி பகவான் சிவனை வணங்கி பேறு பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன.
ராகுக்குரிய தலமாக இருப்பது திருநாகேசுவரம் நாகநாதசுவாமி திருக்கோவில். ராகுவிற்கான விசேஷ தலம் இது. சிவனின் அருள் பெற்ற ராகுவிற்கு இந்த தலத்தில் தனி சன்னிதி இருப்பது சிறப்பு.
கேதுவுக்குரிய தலமாக இருப்பது கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவில், இக்கோவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கேது பகவான் இங்கே மூலவராக நாகநாதர் என்ற திருப்பெயரில் அருள் பாலிக்கிறார்.
அனைத்து நவகிரக ஆலயங்களிலும் மூலவராக சிவபெருமான் இருப்பதை காண முடிகிறது. அனைத்திற்கும் ஆதி குருவான சிவபெருமான், நம் மரபில் ஆதியோகியாக கருதப்படுகிறார். மஹாசிவராத்திரி நாளில் அசைவின்றி அமர்ந்தவர். ஆன்மீக பாதையில் இருக்கும் அனைவருக்கும் அந்த நல்வாய்ப்பை சாத்தியமாக்கும் வாய்ப்பாக மஹா சிவராத்திரி உள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி மஹா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோகா மையத்திலுள்ள ஆதியோகி முன்பு நடைபெற உள்ளது. மஹா சிவராத்திரியை ஒட்டி சிவாங்கா சாதகர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரின் பங்கேற்பிற்கிடையே தமிழகமெங்கும் வலம் வரும் ஆதியோகி ரதங்கள் பல்லாயிரம் கிலோமீட்டர் யாத்திரையை முடித்து பிப்ரவரி 17 அன்று கோவை ஈஷா யோகா மையத்தை வந்தடைய உள்ளன.