கோஹிமா: நாகாலாந்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதுநிலை பட்டப்படிப்பு வரை மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார். நாகாலாந்தில் பிப்.27ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகாலாந்தில் பாஜவுடன் கூட்டணியில் உள்ள என்டிபிபி கட்சியின் நெப்யூ ரியோ முதல்வராக உள்ளார். இந்த மாநிலங்களில் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பலமாக உள்ளது. எனவே இந்த தேர்தலில் பாஜ வெற்றி பெறுமா அல்லது எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் வெல்லுமா என்பது தற்போதைய எதிர்பார்ப்பாக மாறி உள்ளது. இந்த மாநிலங்களின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற பாஜ பல்வேறு வியூகங்களையும் வகுத்துள்ளது.
அதே நேரத்தில் ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே நாகாலாந்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் தாய், சேய் பராமரிப்புக்காக தனிப்பிரிவு அமைக்கப்படும். மத்திய அரசின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 2 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.