நொய்டா: பழுதான செல்போனை பெற்றோர் சரிசெய்து தராததால் ஆன்லைன் கேம்மிற்கு அடிமையான 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா அடுத்த பீட்டா நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு, ஆன்லைன் கேம்மிங் விளையாடுவதில் ஆர்வம் அதிகம். அவர் பயன்படுத்திய செல்போன் பழுதானதால், அதனை சரி செய்து கொடுக்க பெற்றோரிடம் வற்புறுத்தி உள்ளான். ஆனால் பெற்றோர் செல்போனை பழுதிநீக்கி தர மறுத்துவிட்டனர்.
இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்த சிறுவன், வீட்டில் தனது அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதுகுறித்து கிரேட்டர் நொய்டாவின் துணை போலீஸ் கமிஷனர் சாத் மியான் கான் கூறுகையில், ‘செல்போனில் ஆன்லைன் கேம்ஸ் விளையாட்டு அடிமையாக மாறிய 15 வயது சிறுவன், பழுதான தனது செல்போனை சரிசெய்து கொடுக்க பெற்றோரிடம் கேட்டுள்ளான். ஆனால் அவர்கள் செல்போனை சரிசெய்து கொடுக்க மறுத்துவிட்டனர். அதனால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.