தமிழ்நாட்டின் கழுத்தை நெரிக்கும் ஒன்றிய அரசு: சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு!

மதுரையில் மீனாட்சி அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் 30 இலட்ச ரூபாய் மதிப்பில் மாணவிகள் உணவு அருந்தும் கூடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கல்லூரி மாணவிகளுடன் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் 3 நாட்களாக செயல்படாத காரணத்தால் மாணவர்கள் போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. மத்திய பணியாளர் தேர்வாணையத் தலைவருக்கு இன்று கடிதம் எழுதி உள்ளேன். மத்திய பணியாளர் தேர்வாணைய இணையதளத்தை சரி செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய வேண்டிய தேதிகளை நீட்டிக்க வேண்டும்.

சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மத்தியபிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்தி வழக்காடு மொழியாக மாற்றி பல ஆண்டுகள் ஆகிறது. தமிழகத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்ற ஒன்றிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தி அல்லாத மொழிகளை சமத்துவமாக நடத்த ஒன்றிய அரசு மறுத்து வருகிறது.

எம்ய்ஸ் மருத்துவமனை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் ஒன்றிய சுகாதார அமைச்சர் திசை திருப்பி பேசுகிறார். தமிழ்நாட்டின் கழுத்தை எப்படி நெருக்குவது என எங்களுக்கு தெரியும் என ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக பேசுகிறார். தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்போக்குடன் நடத்தி வருகிறது.

மதுரை எம்ய்ஸ் உடன் அறிவிக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மதுரை எம்ய்ஸ் மருத்துவமனையை கொண்டு வர மிகப்பெரிய அளவில் போராட வேண்டிய இருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் எப்படியாவது மதுரை எம்ய்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவோம். ஒன்றிய அரசை எதிர்த்து பேசினால், போராடினால் அவர்களை ஒன்றிய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது” என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.