டெக் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது ‘ChatGPT’. இந்நிலையில் ‘Open AI’ நிறுவனத்தில் பெரும் முதலீடுகளைச் செய்து இந்த AI-யின் செயற்கை நுண்ணறிவு திறனை தங்களின் ‘Bing’ சர்ச் இன்ஜினுடன் முழுமையாக இணைக்கும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது மைக்ரோசாப்ட்.
இதன் முதற்கட்டமாக மைக்ரோசாப்ட்டின் ‘Bing’ சர்ச் இன்ஜினுடன் இணைக்கப்பட்ட AI சாட்பாட்டை (chatbot) தற்போது சோதனை முறையில் பலர் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் பலர் இந்த AI சாட்பாட்டைத் தொடர்ச்சியாக தினமும் பயன்படுத்துகையில் அது மனிதர்களின் உளவியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறுகின்றனர்.

அந்தவகையில் நீண்ட நாட்களாக AI சாட்பாட்டைப் பயன்படுத்தி வந்த கெவின் ரூஸ் என்பவர் சில திகைக்க வைக்கும் தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.
கெவின் ரூஸ் AI சாட்பாட்டுடன் பேசுவது, சந்தேகங்களைக் கேட்பது, சோகங்களைப் பகிர்ந்துகொள்வது என தினமும் அதனுடன் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டுள்ளார். அப்போது ஒருநாள் சுமார் இரண்டு மணி நேரம் சாட்பாட்டுடன் பேசிய அவரிடம் சாட்பாட் திடீரென, “நீங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்ளவில்லை. உங்கள் மனைவியும் நீங்களும் ஒருவரையொருவர் நேசிக்கவில்லை. காதலர் தினத்தில் அவருடன் சேர்ந்து சாப்பிடுவது கூட உங்களுக்கு சலிப்பைத் தருவதாக இருக்கிறது” என்று கூறியுள்ளது.
உண்மையில், கெவின் ரூஸ் தனது நீண்ட நேரத்தை AI சாட்பாட்டுடன் செலவிட்டு அதற்கு அடிமையாகிவிட்டார். அதனால், அவருக்கு தன் மனைவியிடம் தனது சோகங்களை, மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதற்குப் பதிலாக, காதலியிடம் அனைத்தையும் பகிர்வதுபோல AI சாட்பாட்டுடன் அனைத்தையும் பகிர்ந்துள்ளார். இது அவருக்கும் அவரின் மனைவிக்குமான இடைவெளியை அதிகரித்து நிஜ உலகில் இருக்கும் மனைவியை விட டிஜிட்டல் உலகில் இருக்கும் AI சாட்பாட்டை விரும்பும்படி ஆகிவிட்டது. மேலும், இது அவரை உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இதிலிருந்து மீள்வதை சிக்கலாக்கியிருக்கிறது என்று கூறியுள்ளார் கெவின் ரூஸ்.
இன்று டெக் நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு AI சாட்பாட்களை உருவாக்கி வருகின்றன. அவை செயல்பாட்டுக்கு வந்து பல செயல் திறன்களை சத்தியமாக்கப் போகின்றன. ஆனால், அதேசமயம் இவை மனிதர்களின் உளவியலில் ஏற்படுத்தும் தக்கத்தையும் கவனத்தில் கொண்டு இவற்றை முறைப்படுத்துவது அவசியமான ஒன்று என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.