விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரில் ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றும் கோமதி நாராயண கண்ணன் வசித்து வருகிறார்.
இவர் மகா சிவராத்திரியை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் குன்னூர் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேற்று முன்தினம் சென்று உள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த பொழுது உடைகள் சிதறி கிடந்துள்ளன.
மேலும் வீட்டிலிருந்த பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்து 30 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் ரொக்கம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மற்றும் ஆசிரியர் உட்பட 3 வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு அருகில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.