சென்ற வாரம் அழகி யூரோபாவை அலேக்காகத் தூக்கிச் சென்றார் கடவுள்களுக்கு எல்லாம் பெரிய கடவுளான பிக் பாஸ் ஜீயஸ். யாருமில்லாத தனித் தீவில் அவளை அம்போவென விட்டு விட்டு மறைந்து போனதும், நடப்பது எதுவுமே புரியாது தவித்து நிற்கிறாள் யுரோபா. இதற்கு மேல் தன்னால் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது என்பதை நன்குணர்ந்தவள் இறுதியாக தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறாள். யுரோபாவுக்கு என்ன நடந்தது? அவள் மேல் காதல் கொண்டு கடத்தி வந்த ஜீயஸின் காதல் கைகூடியதா?
யுரோபா முன் தோன்றிய காதல் தேவதை
“நான் யாரு? இப்போ எங்க இருக்கேன்?” என மயக்கம் தெளிந்த யூரோபாவுக்கு நடந்த விபரீதம் புரிய ஆரம்பித்தது. தான் இனிமேல் உயிரோடு வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று மனம் உடைந்த யுரோபா தான் உயிரை முடித்துக்கொள்ள முடிவு செய்து கடலை நோக்கி மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கத் தொடங்குகிறாள். திடீரென்று அவள் நடை தடைப்பட்டது. அவள் முன்னாள் ஒரு பிரகாசமான ஓர் ஒளி தோன்றுகிறது. ஒரு வேளை வானத்திலிருக்கும் நட்சத்திரம் ஏதாவது கீழே விழுந்து சிதறுகிறதா என்று கூட ஒரு நிமிடம் அஞ்சுகிறாள் யுரோபா. அந்தளவு பிரகாசமான ஒளி!

கண்ணைக் கூசும் அந்த ஒளியின் பிரகாசம் கொஞ்சம் கொஞ்சமாக மங்க மங்க, காதல் மற்றும் காமத்தின் கடவுளான அப்ரோடைட் (Aphrodite) அங்குத் தோன்றுகிறாள். அவளைப் பார்த்ததும் யுரோபாவின் விழிகள் ஆச்சரியத்தில் அகல விரிகின்றன. “பெண்ணே உனக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா?” எனக் கேட்டாள் அப்ரோடைட். “நீ யாரு?” என மலங்க மலங்க விழித்த யுரோபாவைப் பார்த்து, “அன்று உன் கனவில் வந்தது நான்தான் பெண்ணே!” என்ற போது யுரோபாவுக்கு அவள் கனவில் வந்த பெண்ணின் முகம் நினைவில் வந்தது.
“பெண்ணே! கனவில் வேறொரு பெண்ணுடன் நடந்த கலகத்தில் வென்று உன்னை எனக்குச் சொந்தமாக்கிக் கொண்டு விட்டேன், எனவே நீ என் சொல்படி தான் நடந்து கொள்ள வேண்டும்”, என்று கூறிய அப்ரோடைட் தொடர்ந்து, “’என்னுடன் வா’ என்று மூன்று தடவைகள் உன்னை அழைத்தது உனக்கு ஞாபகம் இருக்கும் என நினைக்கிறேன்” என்று மீண்டும் அந்தக் கனவை ஞாபகமூட்டினாள். “எங்கப்பன் பேச்சையே நான் மதிக்க மாட்டேன், யாருனே தெரியாத நீ சொல்றத நான் ஏன் கேக்கணும்” என்று யூரோபாவின் மைண்ட் வாய்ஸ் அலறியது.
தொடர்ந்து யுரோபாவின் கண்களைப் பார்த்து, “பயப்படாதே பெண்ணே! உன்னைக் கடத்தியது வேறு யாருமல்ல, கடவுள்களுக்கு எல்லாம் கடவுளான ஜீயஸ்தான் காளை வடிவில் உன்னைக் கடத்தி வந்தார். அவர் தன் காதலின் அடையாளமாக உன்னைக் கொண்டாடுவார். தனது அன்பின் வெளிப்பாடாக உன்னை இந்த உலகின் அனைத்து இன்பங்களுக்கும் அறிமுகம் செய்து வைப்பார்” என ஆசை வார்த்தைகளால் யுரோபாவின் மனதை ஆறுதல் படுத்தினாள். “இப்போ புரியுது நீ யாருன்னு” என்று மனசுக்குள் சொல்லிக்கொண்ட யூரோபா, “ஷாஜகான்ல வர்ற விஜய் சார் நீங்களா?” என அப்ரோடைட் கையைப் பற்றிக் குலுக்கினாள்.

காதலைச் சொன்ன ஜீயஸ் (Zeus)
அப்போது அப்ரோடைட்டின் பின்னால் இருந்து ஓர் உயர்ந்த, கட்டுமஸ்தான உருவம் ஒன்று வெளிப்பட்டது. ஆம், அது ஜீயஸேதான். யுரோபா முன் தோன்றிய ஜீயஸ், 90ஸ் கிட்ஸ்போல ராஜா, ரஹ்மான் பின்னணி இசை ஒலிக்க வெட்கப்பட்டு நிற்காமல், 2கே கிட்ஸ்போல படக்கென்று லவ்வைச் சொல்லிவிட்டு அனிருத் வாய்ஸில் ‘ஆரோமலே…’ பாடினார். “நீ இப்போது நின்று கொண்டு இருக்கும் இடம் எனக்குச் சொந்தமானது. இதன் பெயர் கிரேட்டன். நான் பிறந்ததிலிருந்து இது எனக்கே எனக்குச் சொந்தமான நிலம். ஆனால் இன்று முதல் இது உனக்குச் சொந்தமாகிறது. யுரோபா மற்றும் ஜீயஸ்ஸின் காதலின் சாட்சியாக இது உனக்குச் சொந்தமாகிறது. என் மூலமாக நீ பல குழந்தைகளைப் பெறுவாய். அவர்களுக்கு எல்லாம் இந்த நிலம் தாயகமாகப் போகிறது” என்று காதல் டயலாக்குகளுக்குப் பதில் சொத்து பங்கீடு குறித்து சரளமாக அள்ளி வீசினார் ஜீயஸ்.
காதல் தேவதை சிக்னல் காட்ட, வானத்திலிருந்து மன்மதன் மலர் அம்புகளை ஏவ, ஜீயஸ் மேல் யுரோபாவுக்கும் கண்டதும் காதல் என்னும் தீ பற்றிக்கொண்டது. (வந்தாதானே கதை நகரும்!)
யுரோப்பாவும் ஜீயசின் அழகில் மெல்ல மெல்ல மயங்கத் தொடங்கினாள். ஜீயசின் கண்களில் கண்மணிகளுக்குப் பதில் ஹார்ட்டின் டிங்க் எனத் தோன்ற, யுரோபாவும் அதை ‘லைக்’ செய்தாள். அதில் தெரிந்த காதலில் உருகிப் போனாள். கொரோனா காலத்துக் காதல் போல வெறும் பார்வையாலே தழுவிக் கொண்டனர். அவர்களுக்குப் பின்னால் வாசிங் பவுடன் விளம்பரம்போல வெள்ளை நிற ஆடை அணிந்த தேவதைகள் வயலின் வாசிக்க ஆரம்பித்தார்கள். ‘லா லா லா…’ என ஒரு அழகிய ஹம்மிங்க் வேறு கோரஸாகக் கேட்டது. யுரோபாவின் பஞ்சு போன்ற மென்மையான வழுவழுக்கும் கரங்களை தன் கசகசவென்று முடி வளர்ந்த முரட்டுக் கைகளால் பற்றிய ஜீயஸ் மெல்ல மெல்ல அவள் அருகே நெருங்கி வந்தார். பளிச்சென்ற பிரகாசமான அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி அவள் உதடுகளை நோக்கி மெல்லச் சரிந்தார். திரையில் இரண்டு பூக்கள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டன. (அட, அதாங்க சென்சார்!)

பக்கத்தில் தேமே என சிவபூசையில் கரடி போல நின்று பார்த்துக்கொண்டிருந்த காதல் தேவதையை யாருமே கண்டுகொள்ளவில்லை. கால்ஷீட் முடிந்த கணக்காக அந்த இடத்தை விட்டு அகன்றாள் காதல் தேவதை அப்ரோடைட். காதல் ஜோடிகள் அடுத்து… சென்சார்டு!
யுரோபா மற்றும் ஜீயஸ் இருவரின் காதலும் அழகிய பூவாகத் துளிர்விட்டு, செடியாக வேரூன்றி, விருட்சமாக வளர்ந்தது.
ஜீயஸின் காதல் பரிசுகள்
காதலைக் கொண்டாட ‘காதலர் தினம்’ என ஒன்று அப்போது ஐரோப்பியருக்குத் தேவைப்படவில்லை (இப்போது மட்டும் என்னவாம்?). நின்றால் காதல், நடந்தால் காதல், படுத்தால் காதல், காதலோ காதல் என ஜாலியாக வாழ்ந்தார்கள்.
அழகி யுரோபாவை அடைந்த மகிழ்ச்சியில் ஜீயஸுக்குத் தலை கால் புரியவில்லை. ‘இந்தக் கடல் எவ்ளோன்னு சொல்லு, இந்த மலை எவ்ளோன்னு சொல்லு… ஐயோ, இப்ப நான் ஏதாவது வாங்கணுமே!’ என சம்பளம் வந்த ஐடி ஊழியர் கணக்காகக் குதித்தார். யுரோபாவுக்காக ஏதாவது விசேஷமான பரிசைக் கொடுக்க வேண்டும் என எண்ணினார். அவர் வேறு கடவுளுக்கு எல்லாம் கடவுளல்லவா… எனவே அவர் கொடுத்த காதல் பரிசுகளும் அவரை போலவே கெத்தாக மாஸும் கிளாஸும் கலந்ததாகவே இருந்தன.
ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து முக்கிய விலைமதிப்பற்ற பரிசுகளை வழங்கினார். முதலாவது பரிசு தாலோஸ் எனப்படும் ஒரு வெண்கல மனிதன். கடற்கொள்ளையர்கள் மற்றும் படையெடுப்பாளர்களிடமிருந்து யூரோபாவை பாதுகாக்க வெண்கலத்தால் செய்யப்பட்ட ஒரு மாபெரும் ஆட்டோமேட்டன் அது. தாலோஸ் தினமும் மூன்று முறை யுரோபா இருந்த தீவின் கரையைச் சுற்றிச் சுற்றி வந்தார். யுரோபா அருகே ஒரு ஈ, காக்கா, கொரோனா வைரஸ் கூட அண்டாத அளவுக்கு அவளுக்குப் பாதுகாப்பான காவலராகப் பணியாற்றினார். நல்லவேளை சிட்டி ரோபோ போல இந்த தலோஸ் ரோபோவுக்கு உணர்ச்சிகள் வந்து யுரோபா மீது காதல் தோன்றவில்லை.

இரண்டாவதாக எல்லா காதலனும் காதலிக்குக் கொடுக்கும் ஸ்டாண்டர்டு பரிசு. யெஸ். ஒரு குட்டி நாய்க்குட்டி. ஆனால் இது கண்ணு மூக்கு வெளியே தெரியாத, புசு புசு பாமனேரியன் அல்ல. கொஞ்சம் வில்லங்கமான நாய். லாலாப்ஸ் என்ற அந்த நாய் யூரோபா விரும்பிய எதையும் வேட்டையாடியது. யூரோபாவைத் தாக்க வரும் எவரையும் வேட்டையாடும். எவன் வந்தாலும் கடிப்பேன் மோடிலேயே எப்போதும் அலைந்தது அந்த லாலாப்ஸ் நாய். எப்போதுமே யூரோபாவைச் சுற்றிச் சுற்றி வந்த லாலாப்ஸ், யூரோபாவை நெருங்க நினைத்த எதிரிகளை எல்லாம் வேட்டையாடிக் குவித்தது. ஜீயஸ் கொடுத்த நாய் என்பதால் எஜமானர் விசுவாசத்திற்காக அவரை மட்டும் விட்டு வைத்தது. இல்லை என்றால் முதல் கடி ஜீயசுக்குத்தான் இருந்திருக்கும்.
மூன்றாவது பரிசு ஒரு மந்திர ஈட்டி. இலக்கு எதுவாக இருந்தாலும் துல்லியமாக, குறி தவறாமல் சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது அது. நான்காவது பரிசு ஒரு அழகிய ஹார்மோனியா நெக்லஸ். நெருப்பு மற்றும் உலோகத்துக்குக் கடவுளான ஹெபஸ்டஸ் வடிவமைத்த அழகான நெக்லஸ் யூரோபாவின் அழகைக் கோடி மடங்கு கூட்டியது. அவள் கழுத்துக்கு ஆபரணமாக மட்டுமல்ல, பாதுகாப்பு கவசமாகவும் அது இருந்தது.
ஐந்தாவதும் முக்கியமானதுமான பரிசு கிரேட்டன் நிலம். அதுவரை ஜீயஸுக்குச் சொந்தமாக இருந்த நிலம் அவர் ஆசை மனைவிக்குக் காதல் பரிசாக வழங்கப்பட்டது. பின்னாளில் கிரேட்டனையும் சேர்த்து ஒட்டு மொத்த ஐரோப்பியக் கண்டத்துக்கும் யுரோபா பெயர் சூட்டப்பட்டு, எக்காலத்துக்கும் அழியா நினைவுச் சின்னமாக அப்பரிசு மாறியது.

காதலின் முடிவு…
ஜீயஸுக்கும் யுரோபாவுக்கும் மினோஸ், ராதாமந்திஸ் மற்றும் சர்பெடன் எனும் மூன்று அழகிய ஆண் குழந்தைகள் பிறந்தனர். இவர்கள் மூவருமே பின்னாளில் தத்தமது பரந்த ராஜ்ஜியங்களை ஐரோப்பியக் கண்டத்தில் அமைத்துக்கொண்டனர். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல, பிளே பாயான ஜீயஸ் ஒரு கட்டத்தில் “காதல் கசக்குதய்யா” எனப் பாட ஆரம்பித்தார். யுரோபா மீதான ஆசை வடிந்து மோகம் வற்றிவிட, அவளைக் கைவிட்டுவிட்டு ஒலிம்பஸ் மலைக்குத் திரும்பிச் சென்று தனது அடுத்த இன்னிங்ஸ் மன்மத லீலைகளை ஆரம்பித்தார்.
அதே நேரத்தில் யுரோபா ஜீயஸ் பரிசளித்த கிரேட்டனிலேயே தன் மூன்று மகன்களோடும் தங்கியிருந்தார். சிறிது காலத்திற்குப் பின் கிரீட் தேசத்தைக் கட்டுப்படுத்தி ஆள யுரோபாவால் நியமிக்கப்பட்ட அரசன் ஆஸ்டெரியனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் (லாலாப்ஸ் நாய்க்கு இந்த விஷயம் தெரியுமா?). ‘Asterion’ பின்னர் ஜீயஸ் மற்றும் யூரோபாவின் மகன்களைத் தனது சொந்த பிள்ளைகளாகத் தத்தெடுத்து வளர்த்து’வந்தார். ஆஸ்டெரியன் மற்றும் யுரோபாவின் ஆட்சியின் கீழ் ஐரோப்பியக் கண்டம் செழித்து வளரத் தொடங்கியது. குறிப்பாக பண்டைய கிரேக்கர்கள் மீதான அவரது செல்வாக்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
காதலுக்கு மரியாதை!
ஜீயஸின் காதலின் பரிசாக யுரோபாவுக்கு வழங்கப்பட்ட கிரேட்டன் நிலம் அதைச் சூழ்ந்த அத்தனை நாடுகளையும் ஆதிக்கம் செலுத்தியது. செல்வமும் காதலும் செழித்துக் கொழித்த பூமியின் அழகிய சொர்க்கமான அந்நிலம் யுரோபா, (Europa/Europe) அதாவது ‘ஐரோப்பா’ என்று பெயர் பெற்றது. என்னதான் யுரோபாவைப் பிரிந்து போனாலும், என்னதான் ஆயிரம் அழகிகளுடன் கூடிக் கூத்தடித்தாலும் யுரோபா மேலிருந்த காதல் ஜீயஸின் அடிமனதில் ஓர் அழகிய ஓவியம் போல அழியாமல் படிந்திருந்தது. யுரோபா இறந்தபோது, ஜீயஸ் துடித்துப் போனார். அதுவரை அத்தனை மனைவிகள், அத்தனை காதலிகளுடன் காமத்திலும் களியாட்டத்திலும் திளைத்திருந்தாலும், யுரோபாவின் மரணச் செய்தி ஜீயுஸை உலுக்கியது. அவரின் அத்தனை உணர்வுகளையும் மறக்கச் செய்தது.

இறந்த யுரோபாவை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஜீயஸ் அவளை ஒரு அழகிய பிரகாசமான நட்சத்திரமாக மாற்றினார். அவளைச் சுற்றிப் பல ஒளி வீசும் நட்சத்திரங்களை உருவாக்கி அவற்றை ஒரு குடும்பமாக ஒன்றிணைத்தார். அவற்றை ஒரு பெரிய வளாகத்தில் ஒன்றிணைக்க, எந்தக் காளையில் வடிவில் அவளை முதலில் கண்டாரோ, மீண்டும் அதே வெள்ளை காளையின் வடிவத்தை எடுத்தார். பின்னர் அந்த நட்சத்திரத்தின் மீது ஏறி, அதனைச் சுற்றிச் சூழ்ந்து காதலுடன் அணைத்துக் கொண்டார்.
அதுதான் காளை வடிவில் அமைந்துள்ள டாரஸ் விண்மீன் (Taurus Constellation). வடக்கு வான அரைக்கோளத்தில் அமைந்துள்ள மிகப் பெரியதும், முக்கியமானதுமான டாரஸ் விண்மீன் ராசி மண்டலத்தின் (ரிஷபம்) முக்கிய விண்மீன்களில் ஒன்றானது.
இன்று யுரோபா என்ற பெயர் வியாழனின் 16 நிலவுகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளது. காரணம் அதன் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதாக நம்பப்படுகிறது. ஜீயஸைப் பிரிந்து வாடிய யுரோபாவின் கண்ணீரால் அந்த நிலவு நிறைந்திருப்பதாக ஐரோப்பியர்கள் நம்புகிறார்கள். ஐரோப்பியக் கண்டத்தின் தாயாகக் கருதப்படும் யுரோபா, காளை வடிவிலிருந்த ஜீயஸின் முதுகில் ஏறி பயணிக்கும் அழகிய காட்சி யூரோ நாணயத்தில் ஓவியமாகப் பதிக்கப்பட்டுள்ளது.

காளையாக மாறிக் கடத்திச் சென்று, காதல் செய்து, அளவிட முடியா ஆனந்தத்தையும், அற்புதமான செல்வத்தையும் அள்ளி வழங்கி, இறந்த பின்னும் பிரிய மனமின்றி மீண்டும் அதே காளையின் உருவெடுத்து தன்னைச் சூழ்ந்து கொண்ட ஜீயஸின் மீதான காதலை, வானில் மின்னும் யுரோபா நட்சத்திரம் தினமும் கண்சிமிட்டிச் சொல்லிக்கொண்டே இருக்கிறது.