கர்நாடக மாநிலத்தில் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மகனை தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் கட்டேமடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிட்டியப்பா. இவருடைய மகன் நிரன் திம்மய்யா(28). இந்நிலையில் நிரன் திம்மையா குடும்ப செலவுக்காக பணம் கொடுக்காமல் இருந்ததால், அடிக்கடி தந்தை, மகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் மகனிடம் குடும்ப செலவிற்காக 2000 ரூபாய் சிட்டியப்பா கேட்டுள்ளார்.
ஆனால் அவர் தர மறுத்ததால் மீண்டும் இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்து வெளியே சென்ற சிட்டியப்பா, துப்பாக்கியுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த மகனை துப்பாக்கியால் சுட்டு உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நிரன் திம்மய்யா உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த நிரன் திம்மையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து குடும்ப செலவிற்காக பணம் கொடுக்க மறுத்த மகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிட்டியப்பாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.