புதுடெல்லி: விமான போக்குவரத்து துறை, அதிக விமான நிலையங்கள், சிறந்த இணைப்பு வசதிகளுடன் மக்களை நெருக்கமாக கொண்டு வருவதுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் மோடி இன்று (பிப்.22) தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்றுக்குப் பின்னர், உள்நாட்டு விமானப் போக்குவரத்து பயணம், பிப்,19 ஆம் தேதி 4.45 லட்சம் என்ற புதிய இலக்கைத் தொட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ட்வீட்டை பகிர்ந்துள்ளார். மேலும், அந்தப் பதிவில்,”அதிக விமான நிலையங்கள், சிறந்த இணைப்பு வசதிகளுடன் விமான போக்குவரத்து துறை மக்களை நெருக்கமாக்குவதுடன், நாட்டின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
கரோனாவுக்கு முன்னர், ஒரு நாளின் உள்நாட்டு விமானப் பயணிகளின் சராசரி எண்ணிக்கை, 3 லட்சத்து 98 ஆயிரத்து 579 ஆக இருந்தது. பிப்.20 ஆம் தேதி அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிவிட்டுள்ள ஒரு ட்வீட்டில்,”கோவிட் தொற்றுக்கு பின்னர் உள்நாட்டில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக் கிழமையில் 4 லட்சத்து 44 ஆயிரத்து 845 பேர் உள்நாட்டிற்குள் விமானத்தில் பயணித்துள்ளனர். இந்திய சிவில் விமான போக்குவரத்தின் மற்றுமொரு மைல்கல்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான், விமான போக்குவரத்து துறை, அதிக விமான நிலையங்கள், சிறந்த இணைப்பு வசதிகளுடன் மக்களை நெருக்கமாக கொண்டு வருவதுடன், நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் மோடி இன்று (பிப்.22) தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது 147 விமானநிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. கர்நாடகாவின் சிவமோகாவில் கட்டப்பட்டுள்ள புதிய விமானநிலையத்தை பிப்.27ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். கரோனா பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த விமான போக்குவரத்து துறை தற்போது மீட்சி பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது.
More airports and better connectivity…the aviation sector is bringing people closer and boosting national progress. https://t.co/9fZ29ni2lo
— Narendra Modi (@narendramodi) February 22, 2023