தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தாள் பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் தமிழக முதலைச்சர் மற்றும் திமுக தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு அனைவரும் ஓரணியில் இருந்து போட்டியிட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் பேச்சு
இதன்பிறகு பேசிய மு.க.ஸ்டாலின், இது எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடை அல்ல. இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா என்றார். அண்ணா மற்றும் கலைஞர் போல் பேசத் தெரியாது. ஆனால் உழைக்க தெரியும். 70 வயதாகிவிட்டது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. லட்சியவாதிகளுக்கு என்றும் வயதாவதில்லை. மகாபாரதத்தில் சூதாட்டம் இருக்கிறதால் என்னவோ தடை செய்ய மறுக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதே முக்கியம். பாஜகவை எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்க வேண்டும்.
காங்கிரஸ் கூட்டணி உறுதி
காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்ற அழைப்புகளை நிராகரிக்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரைசேராது. மதுரை எய்ம்ஸூக்கு ஒரே ஒரு செங்கலை வைத்துவிட்டு அதற்கு மேல் எதுவும் செய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும். நாற்பதும் நமதே… நாடும் நமதே என்ற முழக்கத்துடன் தேர்தல் பணியாற்ற வேண்டும். இதுவே திமுக தொண்டர்கள் எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசு எனக் கூறினார்.