இன்றைய டெக் யுகத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருகிறது. இத்தகைய சூழலில் கர்நாடக மாநிலத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஹியூமனாய்டு ரோபோவை இயற்பியல் பேராசிரியர் ஒருவர் வடிவமைத்துள்ளார். இந்த ரோபோவின் பெயர் ‘சிக்ஷா’ என அறியப்படுகிறது.
மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் முறை முற்றிலும் தற்போது மாறியுள்ளது. அதுவும் கரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஆசிரியர்கள் ஸ்மார்ட்டான வழியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாடம் எடுப்பது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் இந்த ரோபோவுக்கு கர்நாடக மாநிலம் சிர்சி மாவட்டத்தில் வசித்து வரும் பேராசிரியர் அக்ஷய் மஷேல்கர் உயிர் கொடுத்துள்ளார்.
தற்போது ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு புதுமையான வழியில் பாடம் எடுக்கும் பணியை சிக்ஷா மேற்கொண்டு வருவதாக தகவல். நான்காம் வகுப்பு வரையில் இதனால் பாடம் எடுக்க முடியுமாம். அரசுப் பள்ளி மாணவியை போல சீருடை அணிந்து கொண்டு எளிய வடிவில் காட்சி அளிக்கிறது இந்த ரோபோ.
“ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கும் முறை இன்ட்ராக்டிவ் ஆக இல்லை என நான் உணர்ந்தேன். அதனால் இந்த ரோபோவை வடிவமைத்தேன். இது அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்ட ரோபோ அல்ல. ஊரக பகுதியை சேர்ந்த மாணவர்கள் இடையே நிலவும் கல்வி சார்ந்த இடைவெளியை குறைக்கும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டது” என்கிறார் பேராசிரியர் அக்ஷய்.