டெல்லி ஆம் ஆத்மி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்திய சிபிஐ, பதில்கள் திருப்திகரமாக இல்லை என அவரைக் கைதுசெய்தது. இதற்குக் கண்டனம் தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “அரசியல் அழுத்தம் காரணமாகவே சி.பி.ஐ கைதுசெய்திருக்கிறது” என பா.ஜ.க-வை விமர்சித்தார்.

இதற்கிடையில், மணீஷ் சிசோடியாவும், ஏற்கெனவே கைதாகி சிறையிலிருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும், நேற்று திடீரென தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக, ஆம் ஆத்மி அமைச்சரவை கெஜ்ரிவால் உட்பட 5-ஆகக் குறைந்ததையடுத்து, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள், கவுன்சிலர்களிடம் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் கெஜ்ரிவால்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால், “சிசோடியாவும், சத்யேந்தர் ஜெயினும் முழு கல்வி மாடலையும் மாற்றினார்கள். இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்கள். ஆனால் பிரதமர், அவர்களைச் சிறைக்கு அனுப்பினார். மதுபானக் கொள்கை அதற்கு ஒரு சாக்குபோக்கு. நாங்கள் செய்வதை பா.ஜ.க-வால் செய்ய முடியாது என்பதால், டெல்லியில் நலத்திட்ட பணிகள் நிறுத்தப்பட வேண்டுமென்று பிரதமர் விரும்புகிறார்.

பஞ்சாப்பில் நாங்கள் வென்றதிலிருந்து அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு ஊழல் ஒரு பிரச்னை அல்ல, அமைச்சர்களின் நற்பணியை நிறுத்தவேண்டும். அதுதான் அவர்களின் நோக்கம். சிசோடியா பா.ஜ.க-வில் சேர்ந்தால் நாளைக்கே வெளியாகிவிடமாட்டாரா..?” என்று கூறினார்.