தளபதி கோப்பைக்கான பெண்கள் T20 கிரிக்கெட் போட்டி; திமுக அறிவிப்பு.!

தமிழ்நாடு முதலமைச்சரும்,
திமுக
தலைவருமான முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இன்று பிறந்த குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் நலதிட்ட உதவிகளும் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் பொதுமக்கள் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போன் எ விஷ் மற்றும் செல்ஃபி வித் சிம் உள்ளிட்ட முயற்சிகள் திமுக தகவல் தொழில்நுட்ப அணியால் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பருக் அப்துல்லா, உத்தரபிரதேச எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் திமுக சார்பில் விளையாட்டு போட்டிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக விளையாட்டு மேம்பாடு அணி வெளியிட்ட அறிக்கையில், ‘‘திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் “தளபதி கோப்பை” பெண்கள் T20 கிரிக்கெட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மெரீனா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது என கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளரும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு: தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் “தளபதி கோப்பை” பெண்கள் T20 கிரிக்கெட் போட்டி இம்மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மெரீனா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியை கழக இளைஞரணிச் செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
அவர்கள் சென்னை சேப்பாக்கம் மெரீனா விளையாட்டு மைதானத்தில் நாளை காலை 9.30 மணியளவில் துவக்கி வைக்கவுள்ளார்கள். அச்சமயம் கழக விளையாட்டு மேம்பாட்டு அணிக்கான LOGO எனப்படும் இலட்சினையும் வெளியிட உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களும், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், பணிகள் நிலைக்குழுத்தலைவர் நே.சிற்றரசு அவர்களும், பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி துணைத் தலைவர், திருவல்லிக்கேணி பகுதி கழகச் செயலாளர் ARPM.காமராஜ் அவர்களும், மண்டலக் குழுத்தலைவர், சேப்பாக்கம் பகுதி கழகச் செயலாளர் S.மதன்மோகன் அவர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இப்போட்டியின் ஒருங்கிணைப்பு பணிகளை மாநில துணைச் செயலாளர்களான பொன்.கௌதம்சிகாமணி, எம்.பி, எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.பி., ஜே.எல்.ஈஸ்வரப்பன், எம்.எல்.ஏ., பைந்தமிழ் பாரி மற்றும் நெல்லை வே.நம்பி ஆகியோர் மேற்கொள்ள உள்ளார்கள் என தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்’’ என அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.