முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியதாவது: இந்தியா தற்போது கடினமான சூழலில் உள்ளது. ஜனநாயகம், அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. வலுவான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே காஷ்மீருக்கும், தமிழகத்துக்கும் பொதுவான ஒன்றாக உள்ளது.
மக்கள் அமைதியுடன் வாழ…: நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். இதை அவரிடம் நான் கோரிக்கையாக வைக்கவில்லை. உரிமையுடன் கேட்கிறேன். கண்ணியம், மரியாதை, அமைதியுடன் அனைவரும் வாழக் கூடிய இந்தியாவை கட்டமைக்க பிற தலைவர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இதற்கு ஸ்டாலினால் நிச்சயம் உதவ முடியும். இதுதான் நேரம். தேசிய அளவில் அவர் பணியாற்ற முன்வர வேண்டும்.
தமிழகத்தை கட்டமைத்ததைப் போல தேசத்தையும் கட்டமைக்கவேண்டும். அடுத்த பிரதமர் யார் என்பதை மறந்து தேர்தலுக்காக உழைப்போம். வெற்றிக்கு பிறகு பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என கார்கேவையும் கேட்டுக் கொள்கிறேன். எனவே, வேற்றுமைகளை ஒருபுறம் வைத்து ஒருங்கிணைவது குறித்து சிந்திப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
பிரதம வேட்பாளராக ஸ்டாலின்?: முன்னதாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பரூக் அப்துல்லா, ‘‘இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியின் தொடக்கமாக இந்த நிகழ்ச்சி உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்போம்’’ என்றார்.
தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளர் ஆவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது?’’ என தெரிவித்தார்.