ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அதைத்தொடர்ந்து, இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். காலை 10 மணிக்கு முன்னணி நிலவரம் தெரியவரும். மாலைக்குள் முழு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதற்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் கருவிகள், 286 கட்டுப்பாட்டு கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
286 முதன்மை அலுவலர்கள், 858 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் 62 அலுவலர்கள் என மொத்தம் 1,206 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இடைத்தேர்தலில் 82 ஆயிரத்து 138 ஆண்கள், 88 ஆயிரத்து 37 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் என மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் வாக்களித்தனர்.
இது 74.79 % வாக்குப் பதிவு ஆகும். வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்ட சரக்கு வாகனங்கள் மூலமாக போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு ஐஆர்டிடி பொறியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு அங்குள்ள வைப்பறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
இத்தேர்தலில், 77 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால் வாக்கு எண்ணிக்கையின்போது கால தாமதத்தை தவிர்க்க 2 அறைகளில் வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, தரைத்தளத்தில் உள்ள அறையில் 10 மேஜைகளும், முதல் தளத்தில் உள்ள அறையில் 6 மேஜைகளும் என மொத்தம் 16 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பார்வையாளர் உள்பட 3 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்ள உள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள `ஸ்ட்ராங் ரூம்’ முழுவதும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த கேமராக்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான இன்று வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது. மேலும், ஈரோடு, பவானி தீயணைப்புதுறையினர் 40 பேரும் சுழற்சி முறையில், 24 மணி நேரமும் தயார் நிலையில் பணியில் உள்ளனர்.