திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மண்டல பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்: மார்ச் 23ம் தேதி பங்குனி தேரோட்டம்

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மண்டல பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 23ம் தேதி பங்குனி தேரோட்டம் நடக்கிறது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்- அகிலாண்டேசுவரி கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பிரமோற்சவம் 48 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மண்டல பிரமோற்சவம் நேற்று (1ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை 48 நாட்கள் நடக்கிறது. மண்டல பிரமோற்சவத்தையொட்டி கோயிலில் நேற்று காலை பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி சுவாமி, அம்பாள், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கொடிமரம் அருகே வந்தனர். பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் பெரிய கொடி ஏற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து கணபதி, சுப்பிரமணிய சாமிகளுக்கு உற்சவம் நடந்தது.

48 நாள் நடைபெறும் இந்த மண்டல பிரமோற்சவத்தில் வரும் 18ம் தேதி எட்டுதிக்கும் கொடியேற்றத்துடன் பங்குனி தேர்த்திருவிழா துவங்குகிறது. அன்று காலை பங்குனி தேருக்கு முகூர்த்த கால்நடும் நிகழ்ச்சி நடக்கிறது.

அன்றிரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும், 19ம் தேதி சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும், 20ம் தேதி பூத வாகனத்திலும், காமதேனு வாகனத்திலும், 21ம்தேதி கைலாச வாகனத்திலும், கிளி வாகனத்திலும், 22ம்தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 23ம் தேதி நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் தெருவடைச்சான் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24ம் தேதி வெள்ளிமஞ்சத்திலும், 25ம் தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 26ம் தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷவாகனத்திலும் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். 27ம் தேதி காலை நடராஜர் புறப்பாடு, நண்பகல் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

மாலை வெண்பட்டு, வெண்மலர்கள் சாற்றி கொண்டு ஏக சிம்மாசனத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். ஏப்ரல் 6ம் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. இதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர். 7ம் தேதி சாயாஅபிஷேகம், 8ம் தேதி மண்டலாபிஷேகத்துடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.