ஈரோடு கிழக்கில் டெபாசிட் வாங்க எத்தனை வாக்குகள்? எந்தெந்த கட்சிகள் 'காலி’?

திருமகன் ஈவேரா திடீர் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது, 82 ஆயிரத்து 21 ஆண்கள், 87 ஆயிரத்து 907 பெண்கள், இதர வாக்காளர்கள் 17 பேர் வாக்களித்தனர். இதன்மூலம் மொத்தம் 1,69,945 வாக்குகள் பதிவாகியிருப்பது தெரியவருகிறது.

டெபாசிட் தொகை

ஒரு தொகுதியில் வேட்பாளர் போட்டியிடுவதற்கு உரிய டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். வெற்றி பெற்றால் டெபாசிட் தொகை திரும்ப கிடைத்துவிடும். இல்லையெனில் பதிவான மொத்த வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெறுவது அவசியம். இல்லையெனில் வேட்பாளர் டெபாசிட் இழக்க நேரிடும். அதன்பின்னர் டெபாசிட் தொகை தேர்தல் ஆணையத்திற்கே சென்றுவிடும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

அந்த வகையில் ஈரோடு கிழக்கில் டெபாசிட் வாங்க வேண்டுமெனில் சுமார் 28 ஆயிரம் வாக்குகளை பெற வேண்டும் எனத் தெரிகிறது. தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. பிற்பகல் நிலவரப்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில்
காங்கிரஸ்
வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 70,299 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 24,985 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3,604 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 606 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இரண்டே கட்சிகள்

இதுவரை 9 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 6 சுற்றுகள் இருக்கின்றன. இந்த சூழலில் காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் பெறுவதற்கான வாக்குகளை பெற்று விட்டார். எஞ்சிய சுற்றுகளில் கூடுதல் வாக்குகளை பெற்று அதிமுகவும் டெபாசிட் வாங்கிவிடும். மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 28 ஆயிரம் வாக்குகளை தாண்டுவது மிகவும் கடினம் எனக் களநிலவரம் தெரிவிக்கிறது.

டெபாசிட் காலி

குறிப்பாக நாம் தமிழர் கட்சி, தேமுதிக, இந்து திராவிட மக்கள் கட்சி, தமிழ்நாடு இளைஞர் கட்சி, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி, சமாஜ்வாதி கட்சி, உழைப்பாளி மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

வாக்கு வித்தியாசம்

இதுதவிர சுயேட்சைகள் பலரும் 100 வாக்குகளை கூட தாண்டவில்லை. எனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் இரண்டு பேர் மட்டுமே டெபாசிட்டை திரும்பப் பெறுவர் எனத் தெரிகிறது. காங்கிரஸ் வெற்றி முகமாக சென்று கொண்டிருப்பதை அக்கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் 67,300 வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால் இம்முறை 70 ஆயிரம் வாக்குகளை தாண்டிவிட்டது. இன்னும் சில சுற்றுகள் இருப்பதால் கூடுதலாக 20 ஆயிரம் வாக்குகளை பெற்று சுமார் ஒரு லட்சம் வாக்குகளை ஈவிகேஎஸ் இளங்கோவன் நெருங்கி புதிய சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.