`சமூகநீதியில் மட்டுமல்ல; சூழலியல் நீதியிலும் இந்தியாவுக்கு தமிழ்நாடு வழிகாட்டும்'- முதல்வர் ஸ்டாலின்

“தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும். இனிமேல் மனிதநலன் என்ற ஒன்றே கிடையாது என்பதை உணர்ந்து கொண்டுதான் இந்த திராவிட மாடல் அரசு `ஒருங்கிணைந்த நலன்’ என்கிற கொள்கையை உறுதியாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது” என இன்று நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

தலைமை செயலகம்

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று (03-03-2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா, ஐ.நா சபை முன்னாள் துணை பொதுச்செயலர் எரிக் சோல்ஹைம், இன்ஃபோசிஸ் நிறுவனர் நந்தன் எம்.நிலேகனி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன், சிவசங்கர் மற்றும் பல்வேறு துறை செயலர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “காலநிலை அபாயங்களை அதிக அளவில் எதிர்கொள்ளக் கூடிய உலகின் ஐம்பது இடங்களின் பட்டியலில் இந்தியாவில் மட்டும் 9 இடங்கள் இருக்கின்றன என்று தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாடு 36-ஆவது இடத்தில் இருக்கிறது என்கிறது இந்தத் தரவு. இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டு உணர்த்தும் என்று நான் நம்புகிறேன். நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், துறையின் பெயரை `சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை’ என்று அறிவித்ததோடு நின்றுவிடாமல், தமிழ்நாட்டுக்கான காலநிலைத் திட்டத்தை அறிவித்து, நிதிநிலை அறிக்கையில் அதற்கென 500 கோடி ரூபாயை ஒதுக்கி இந்தியாவுக்கே முன்மாதிரியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

காலநிலை மாற்றம்

அது மட்டுமல்ல, தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு

பொதுவாக, வெப்பமண்டல நாடுகளிலுள்ள காலநிலையையும், பருவங்களையும் கணிப்பது கடினம். அதுவும் குறிப்பாக சர்வதேச வானிலை மாதிரிகளால் இந்த பகுதிக்கென பிரத்யேகமாக உள்ள விஷயங்களை கணிப்பது மிகவும் கடினம். இதற்காகவே அண்ணா பல்கலைக் கழகத்தில் `காலநிலை ஸ்டூடியோ’ செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுக்கெனத் தனித்துவமான மாதிரிகளை உருவாக்கவும் அதற்கான ரேடார்களை அமைக்கவும் 10 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி, திட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டிலுள்ள 10 கிராமங்களை மீள்தன்மையுடைய கிராமங்களாக (Climate Resilient villages) மாற்றுவதற்கான திட்டம் இன்று துவக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் குறித்து பள்ளி – கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க `காலநிலை அறிவு இயக்கத்தை’ (Climate literacy) செயல்படுத்தப்போகிறோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும். கடல் அரிப்பைத் தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரியத்தைப் பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மு.க.ஸ்டாலின்

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு சதுப்புநிலம்தான் இருந்தது. அதை நாங்கள் 13-ஆக உயர்த்தியிருக்கிறோம். இதைத் தவிர, அருகிவரும் உயிரினங்களான கடற்பசு, தேவாங்கு உள்ளிட்ட உயிரினங்களைப் பாதுகாக்க சரணாலயங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைக்க இந்தியாவிலேயே முதன் முறையாக `Tamil Nadu Green Climate Company’ உருவாக்கப்பட்டு இவற்றை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. மக்கள் கடைகளுக்கு செல்லும்போது வீட்டிலிருந்தே பைகளை எடுத்துச்செல்லவேண்டும் என்பதற்கான குறியீடாக `மீண்டும் மஞ்சப்பை’ இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.

காலநிலை மாற்றம்

வளர்ச்சி ஒரு கண் என்றால் – காலநிலை மாற்றம் பற்றிய சிந்தனை இன்னொரு கண். ஆகவே இந்த இரு கண்களும் மாநிலத்தின் முன்னேற்றத்துக்குத் தேவை. அதற்கான பாதையை இந்தக் குழு வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இனிமேல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களையும் காலநிலை மாற்றக் கண்ணாடி கொண்டு ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த வேண்டும் என்று துறை அமைச்சர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் மனிதநலன் என்ற ஒன்று மட்டுமே கிடையாது என்பதை உணர்ந்து கொண்டுதான், இந்த திராவிட மாடல் அரசு `ஒருங்கிணைந்த நலன்’ (One Health) என்கிற கொள்கையை உறுதியாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறது.

இனிவரும் மாதங்களில், கடுமையான வெப்ப அலைகளை நாடு சந்திக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருக்கிறது. வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை கையாளுவது போல், நாம் வெப்ப அலைகளையும், புதிய புதிய நோய்களையும் கையாளத் தயாராக வேண்டும். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு துறையும் எவ்வளவு கார்பனை வெளியிடுகின்றன என்பதை அறிவியல்பூர்வமாக வெளியிடவிருக்கிறோம். அதனை இந்தக் குழு அல்லது இந்தக் குழு அமைக்கும் துணைக் குழுக்கள் ஆய்வு செய்து, இந்தியா கார்பன் சமநிலையை அடையும் என்று சொல்லப்படும் 2070-ஆம் ஆண்டுக்கு முன்னராகவே தமிழ்நாடு கார்பன் சமநிலையை அடைய இலக்கு நிர்ணயம் செய்யும்.

ஸ்டாலின்

தமிழ்நாடு இந்தியாவுக்கு சமூகநீதியில் மட்டுமல்ல, சூழலியல் நீதியிலும் வழிகாட்டும் என்று உறுதியாக தெரிவித்து, அதற்கான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்தும் என்றும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.