லக்னோ: சுமார் 19 ஆண்டுக்கு முன், பாஜ எம்எல்ஏவிடம் தவறாக நடந்து கொண்ட 6 போலீசாருக்கு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை ஒருநாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த அரிதான சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி, கான்பூரில் மின்வெட்டை கண்டித்து பாஜ எம்எல்ஏ சலில் வைஷ்னோய் தலைமையில் ஒரு குழுவினர் கலெக்டரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது போலீசார் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதில் சம்மந்தப்பட்ட 6 போலீசாருக்கு சிறை தண்டனை வழங்க வேண்டுமென உபி சட்டப்பேரவையின் உரிமை மீறல் கமிட்டி பரிந்துரைத்தது.
இதில் முடிவெடுக்கும் வகையில் உபி சட்டப்பேரவை நேற்று நீதிமன்றமாக மாறியது. சட்டமன்ற விவகார அமைச்சர் சுரேஷ் கண்ணா, 6 போலீசாருக்கும் ஒருநாள் சிறை தண்டனை விதிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகர் சதீஷ் மகானா தீர்ப்பு வாசித்தார். அதன்படி, சட்டப்பேரவை கட்டிடத்தில் ஒரு அறையில் நேற்றிரவு 12 மணி வரை நாள் முழுவதும் 6 காவலர்கள் சிறை வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட பிற வசதிகள் செய்து தரப்பட்டன.