நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த முறையில்வீட்டு வேலை செய்பவர்களும் ஊழியர்கள் தான்

பெங்களூரு-

ஊழியர்கள் விடுவிப்பு

பெங்களூருவில் மைசூரு எலெக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வீடுகள், தொழிற்சாலைகளுக்கு ஒப்பந்த முறையில் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டனர். கடந்த 2000-ம் ஆண்டில் அந்த நிறுவனம், தான் மேற்கொண்டிருந்த அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது.

இதனால் அந்த நிறுவனத்தின் கீழ் வீடு, தொழிற்சாலைகளில் வேலை செய்து வந்தவர்கள் வேலையை இழந்தனர். இதையடுத்து வேலையை இழந்தவர்கள், அந்த நிறுவனத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையின்போது, வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொள்ள கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அந்த நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தொழிலாளர் கோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நடந்த வழக்கின் விசாரணையில், வீடுகளில் தோட்ட பராமரிப்பு, வீட்டு வேலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களை ஒப்பந்த ஊழியர்களாக கருத முடியாது எனவும், அவர்களுக்கு குறைந்த சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

நீதிபதி தீர்ப்பு

அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், தினசரி சம்பள அடிப்படையில் பணி செய்பவர்கள் அனைவரும் ஊழியர்கள் தான் என கூறி, வீட்டு வேலை, தோட்டப்பணிகள் ஆகியவற்றில் பணி செய்யும் அனைவரும் ஊழியர்கள் என்ற பட்டியலில் தான் வருவார்கள் என நீதிபதி கருத்து கூறினார். மேலும் பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் தேவை அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, அதன் மனுவை தள்ளுபடி செய்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.