உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் இன்றைக்கு நுழையாத துறைகளே இல்லை. எத்தனையோ பெண்கள் தங்களது சொந்த தேவைக்குக் கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதுபோன்ற ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி… நிகிதா கெலாட். ஹரியானா மாநிலம் ஹன்சி மாவட்ட போலீஸ் அதிகாரி. மக்கள் மட்டுமல்லாது அதிகாரிகள் மத்தியிலும் அதிக செல்வாக்குடன் விளங்கும் நிகிதா தனது பிரசவத்திற்காக விடுப்பு எடுத்திருந்தார்.
நிகிதா ஒரு மாதமாவது விடுப்பில் இருப்பார் என்று அவரது அலுவலக ஊழியர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் வெறும் 10 நாள்கள் மட்டுமே விடுமுறை எடுத்துக் கொண்டு 11-வது நாள் வேலைக்கு வந்துவிட்டார். அதுவும் தனது 10 நாள் பச்சிளம் குழந்தையையும் அலுவலகத்திற்கு தூக்கி வந்திருந்தார். அவரை பார்த்து அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தனர்.

குழந்தையை மடியில் வைத்துக்கொண்டே பொதுமக்களின் குறைகளை கேட்டுக் கொண்டிருக்கிறார் நிகிதா. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இம்மாவட்டத்தில் பணியாற்றி வரும் நிகிதா குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றி இருக்கிறார்.
சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதில் மாநிலத்திலேயே ஹன்சி மாவட்டம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. போதைப் பொருள்களை பிடிப்பதில் இம்மாவட்டம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சிறிய குற்றமாக இருந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்க நிகிதா உத்தரவிடுகிறார். முழுமையான பங்களிப்புடன் பணியாற்றும் நிகிதாவிற்கு அனைவர் மத்தியிலும் நல்ல மதிப்பு இருக்கிறது. அதோடு மிகவும் எளிமையாக இருக்கும் நிகிதா தனக்குக் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடமும் மிகவும் மென்மையாக நடந்து கொள்கிறார்.
தன் குழந்தையுடனே பணிக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் நிகிதா பணி நேரம் முடிந்த பிறகும் கூட அலுவலகத்தில் இருந்து பொது மக்களின் குறைகளை தீர்க்க முன்னுரிமை கொடுத்து வருகிறார். அவரது இச்செயல்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கின்றன.