அ.தி.மு.க சார்பில் ராஜபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, “எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றுபட்டு எழுச்சிக்கொண்டு, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறுவதற்கான அஸ்திவாரம் இந்தப் பொதுக்கூட்டம். வரும் மாதத்தில் தொண்டர்படை வீறுக்கொண்டு எழுந்து தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்பும் பணியை மேற்கொள்ளும்.

வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை என்பது, தி.மு.க அமைச்சர்கள் மற்றும் சில கட்சித் தலைவர்கள் பேசிய பேச்சால் ஏற்பட்ட அச்ச உணர்வு. வெளிமாநிலத்திலிருந்து வந்திருக்கும் சுமார் 70 லட்சம் பேர் அரசு, தனியார் என பல துறைகளில் பணியாற்றுகின்றனர். அவர்களை மட்டுமே நம்பியிருக்கும் சில துறைகள் உருவாகியிருக்கின்றன. தமிழக தொழிலாளர்கள் 45 லட்சம் பேர் இருக்கின்றனர். அம்பேத்கர் உருவாக்கிய அடிப்படை தத்துவத்தின்படி இந்தியர்கள் யாவரும், இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்திலும் உழைக்கும் உரிமை உண்டு. இதை யாரும் கேள்விக்கேட்க முடியாது. இதை கேள்விக்குறியாக்குவது போன்று சில அமைச்சர்களின் பேச்சு அமைந்தது. அதனால் மக்களிடம் இருந்தும், தொழில்துறையில் இருந்தும் மிகப்பெரிய எதிர்ப்பு வந்தது. இதுதான் இந்தப் பிரச்னையின் தொடக்கப்புள்ளி. இந்தப் பிரச்னையை தவிர்க்க அரசு முயன்று வருகிறது.

வட இந்தியாவிலிருந்து வந்த அரசியல் கட்சியினர் தேவையின்றி பீதியைக் கிளப்பிவிட்டனர். மக்கள் அவர்களை வேற்று மனிதர்களாகப் பார்க்கவில்லை. இதற்காக அரசை கவிழ்ப்பதற்கு சிலர் திட்டமிடுகிறார்கள் என முதல்வர் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவ்வாறு சதி செய்தால் அது தி.மு.க அமைச்சர்களாகத்தான் இருக்க வேண்டும். எதையும் கடந்து போக வேண்டிய காலம் இது. வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு இடம் இல்லை போன்ற பேச்சுகளை அமைச்சர்கள் பேசினாலும், தேவையற்ற பீதி கிளப்புபவர்களையும் முதல்வர் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும்.
அமைச்சர் பொன்முடியின் பேச்சை புத்தகமே போடலாம். எண்ணற்ற இடங்களில் அவர் வரம்புமீறி பேசி வருகிறார். இதற்கு மக்கள்தான் பதில் கொடுக்கவேண்டும். சட்டமும் பதில் அளிக்கலாம். அதற்கு முதல்வருக்கு துணிச்சல் வரவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். இதே நிலை நீடித்தால் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். முன்னாள் முதல்வர் பழனிசாமி உருவப்படம் எரித்த விவகாரத்தில், உண்மை இருந்தால் கண்டிக்கப்பட வேண்டும். யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது. எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் கூட்டணியை நடத்திச் செல்பவர் எடப்பாடி பழனிசாமி. இதற்கு குந்தகம் விளைவிப்பது போன்று செயல்படுவது நல்லதல்ல. ஈரோடு இடைத்தேர்தலில் மனிதப்பட்டியை வைத்து வெற்றிப்பெற்றனர். இதை நாடாளுமன்றத் தேர்தலில் செயல்படுத்த முடியாது. அ.தி.மு.க-வின் பல திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்தியிருக்கிறது. இதனால் ஏற்பட்டிருக்கும் மக்களின் கோபம் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும். மிகப்பெரிய வெற்றி அ.தி.மு.க-வுக்குக் கிடைக்கும்” என்றார்.