ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் 5ஜி இணைய சேவையை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது. மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் அதிவேகமாக 5ஜி சேவையை அளித்து கொண்டிருக்கிறது. தற்போது 300க்கும் மேற்பட்ட நகரங்களில் ஜியோவின் 5ஜி சேவை பயன்பாட்டில் இருக்கிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், ஓசூர், திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, தூத்துக்குடி, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கரூர், கும்பகோணம்,
ஜியோ 5ஜி சேவை
நாகர்கோவில், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஜியோ பெற்றிருக்கிறது. இந்நிலையில் புதிதாக 27 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் இன்று (மார்ச் 8) அறிமுகம் செய்து வைத்துள்ளது.
புதிதாக இரண்டு நகரங்கள்
அதில் தமிழ்நாட்டை சேர்ந்த கோவில்பட்டி, பொள்ளாச்சி ஆகிய நகரங்கள் அடங்கும். இதன்மூலம் தமிழ்நாட்டில் ஜியோ 5ஜி சேவை பயன்பாட்டில் இருக்கும் நகரங்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ”ஜியோ வெல்கம் ஆஃபர்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
தடையற்ற இணைய சேவை
இதன்மூலம் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி 1 Gbps வேகத்தில் அன்லிமிடெட் இணைய சேவையை இன்று முதல் பெறலாம். இந்த நடவடிக்கையால் 4ஜி நெட்வொர்க் சேவையை இனிமேல் எதிர்பார்த்திருக்க வேண்டியதில்லை. வாடிக்கையாளர்கள் முழுவதுமாக 5ஜி சேவைக்கு மாறிக் கொள்ளலாம். 5ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை 700 MHz, 3500 MHz, 26 GHz ஆகிய பேண்ட்களில் பெற முடியும்.
தொழில்நுட்ப வசதிகள்
மேம்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் தடையற்ற 5ஜி சேவையை பெற அனைத்து ஏற்பாடுகளும் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய ஜியோ செய்தித் தொடர்பாளர், கூடுதலாக 25 நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்வது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்.
நாடு முழுவதும் விரிவாக்கம்
இதன்மூலம் நாட்டில் ஜியோ 5ஜி சேவையை பயன்படுத்தும் நகரங்களின் எண்ணிக்கை 331ஆக அதிகரித்துள்ளது. இந்த இலக்கை வெறும் 120 நாட்களில் எட்டியுள்ளது. வரும் டிசம்பர் 2023க்குள் நாடு முழுவதும் ஜியோ 5ஜி சேவையை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டு இந்தியாவிற்கு புதிய மைல்கல்லாக இருக்கும்.
இந்த புரட்சிகரமான 5ஜி தொழில்நுட்பத்தின் பயனை ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்கப் போகிறது. எங்களின் சேவைக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிப்பதற்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். இதனால் 5ஜி போன்கள் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.