அதிமுக சீறினால் தாங்க மாட்டார்கள்; அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி!

அதிமுக – பாஜக இடையில் மோதல் போக்கு தொடர் கதையாகி வருகிறது. இன்னும் ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில் கூட்டணியில் பிளவு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்றைய தினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி பரபரப்பை கூட்டியது. திராவிட கட்சிகளை விமர்சனம் செய்திருந்தார். ஜெயலலிதா போல் தானும் ஒரு தலைவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

மகளிர் தினக் கொண்டாட்டம்

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை பற்றி எடுத்துரைத்தார். மேலும் பேசுகையில், பெண்கள் கமாண்டோ படை, அனைத்து மகளிர் காவல் நிலையம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு, தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்கள் முதல்முறை ஜெயலலிதா அவர்களால் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்டது என்றார்.

அதிமுக ஒரு சமுத்திரம்

பாஜகவில் இருந்து ஆட்களை கொண்டு வந்து திராவிட கட்சிகள் வளர வேண்டிய நிலை இருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அதிமுக என்பது கண்ணாடி அல்ல. கல் வீசினால் உடைவதற்கு. அது ஒரு சமுத்திரம். அதன் மீது கல் வீசினால் அந்த கல் தான் காணாமல் போகும். சமுத்திரம் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

அலைகள் வீசிக் கொண்டே தான் இருக்கும். மாற்றுக் கட்சிகளில் இருந்து விருப்பப்பட்டு வருகிறார்கள். திமுகவில் இருந்து கூட நாளை வருவார்கள். கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சி இருக்கக் கூடாது. பெருந்தன்மையாக இருப்பது தான் சரி. எனக்கு பதவி கொடுத்தது, என் மகனுக்கு கொடுத்தது எல்லாமே ஜெயலலிதா.

தொண்டர்கள் கிளர்ந்தால் அவ்வளவு தான்

எனவே தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியாக இருக்காது. அரசியல் ரீதியாக மோதலாம் என்று கூறினார். பாஜகவில் இருந்து வெளியேறுகிறார்கள் என்றால் அந்த கட்சியின் தலைவர் தான் கட்டுப்படுத்த வேண்டும். எங்கள் கட்சியில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கிளர்ந்து எழுந்தால் என்னவாவது?

ஜெயலலிதா வேற லெவல்

அதற்கெல்லாம் அவர்களால் ஈடு கொடுக்க முடியாது. எனவே அந்த மாதிரி எல்லாம் செய்யக் கூடாது. மேலும் ஜெயலலிதா போன்ற ஆளுமை உடன் ஒப்பிடாதீர்கள். அவரை போல் யாரும் இருக்க முடியாது. இனி ஒருவர் பிறக்க வாய்ப்பில்லை. செஞ்சிக்கோட்டை ஏறுபவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது.

எனவே நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றார். கூட்டணியில் விரிசலா? என்ற கேள்விக்கு, கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் அவர்கள் சரியாக நடந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே அண்ணாமலையும் சொல்லிவிட்டார். எடப்பாடியும் சொல்லிவிட்டார். 2024 வரை கூட்டணி தொடரும் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.