தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்த மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவரை கேலி செய்த எலான் மஸ்க், அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்…

ட்விட்டரில் பல வார்த்தை போர்கள் மூள்வதுண்டு. அப்படி தான் சமீபத்தில் எலானுக்கும், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவருக்கும் வார்த்தை போர் நிகழ்ந்துள்ளது. ஹரால்டூர் தோர்லெய்ப்சன் என அறியப்படும் ஊழியர் ஒருவர் ட்விட்டரில் நீண்ட காலமாக பணிபுரிந்து வருகிறார். இவர் ஹல்லி (Halli) என்ற பெயரில் ட்விட்டரில் இருக்கிறார்.
சமீபத்தில் 200 ஊழியர்களை ட்விட்டர் பணி நீக்கம் செய்தது. அதில் இவரும் ஒருவரா இல்லையா என்பது இவருக்குச் சந்தேகமாகவே இருந்துள்ளது. ஹெச்.ஆரிடம் இதைக் குறித்து விசாரித்த போதும் மழுப்பலான பதிலே இவருக்குக் கிடைத்துள்ளது.
எனவே எலானை டேக் செய்து ட்விட்டரில் தான் வேலையில் இருக்கிறேனா இல்லையா எனக் கேட்டு இருக்கிறார். கேள்விக்குப் பதிலளிக்காமல் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் எனக் கேட்டிருக்கிறார், எலான். பொதுத் தளத்தில் அதைக் கூறலாமா என கேட்டு உறுதி பெற்று, தன்னுடைய பணிகளைக் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதற்குச் சிரிக்கும் எமோஜிகளை அனுப்பி அவமானப்படுத்தியவர், அவரின் இயலாமையைச் சந்தேகித்து, பெரிய தொகையை தன்னிடமிருந்து பெறத் தான் இப்படிச் செய்கிறார். அதோடு இவர் உண்மையாக எந்த வேலையும் செய்யவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
Based on your comment, I just did a videocall with Halli to figure out what’s real vs what I was told. It’s a long story.
Better to talk to people than communicate via tweet.
— Elon Musk (@elonmusk) March 7, 2023
தன்னுடைய பணியின் தன்மை தன்னுடைய குறைபாடு (தசைநார் தேய்வு) அனைத்தையும் விளக்கி ட்விட்டரில் பதிவிட்டார் ஹல்லி. சமூக வலைத்தளத்தில் இருந்த பலரும் எலானுக்கு எதிராக ட்வீட் செய்ய ஆரம்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து புதன்கிழமையன்று எலான் மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்திருக்கிறார். அதில், `எது உண்மை என்பதை அறிந்து கொள்ள நான் ஹல்லிக்கு வீடியோ கால் செய்தேன். இது ஒரு நீண்ட கதை. ட்வீட் மூலம் தொடர்பு கொள்வதை விட மக்களுடன் பேசுவது நல்லது.
ஹல்லியின் நிலைமையை நான் தவறாகப் புரிந்து கொண்டதற்காக நான் அவரிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். அவர் ட்விட்டரில் தொடர்ந்து இருப்பது குறித்துப் பரிசீலித்து வருகிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.