`வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கான நிரந்தரச் சட்டம் கொண்டு வர வேண்டும். மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக் கூடாது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விளை நிலங்களை விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் கைப்பற்றக்கூடாது.
சந்தைப்படுத்துவதில் இந்திய விவசாயிகள், உள்நாட்டு வணிகர்கள், சிறுகுறு தொழில் முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய சந்தை உத்தரவாத சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். பருவநிலை மாற்றத்திலிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் இயற்கை நீர் வளங்களை பாதுகாத்திட ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

டெல்லி போராட்டக் களத்தில் விவசாயிகள்மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். உரம், உணவு, வேளாண் வளர்ச்சிக்கான மானியங்களை குறைக்கக் கூடாது. வேளாண் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரியிலிருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.
இதில் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஹரியானாவைச் சேர்ந்த கக்கா ஜி, பஞ்சாப் பல்தேவ் சிங் சிரஷா, ராஜேந்தர் சிங் கோல்டன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் இடம்பெற்றிருக்கிறார்கள். முன்னதாக கடந்த 2-ம் தேதி கன்னியாகுமரியில் இந்தப் பேரணியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ விவசாயிகளின் பேருந்துக்கு பச்சைக்கொடி காட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்த விவசாயிகள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கடிதத்தை வழங்கினர். அப்போது பேசிய முதல்வர், “மிகச் சிறப்பான பயணம். பொருத்தமான காலத்தில் தொடங்கியிருக்கிறீர்கள். உங்கள் பயணம் முழு வெற்றி பெறும் என்று நான் வாழ்த்துகிறேன்.
தொடர்ந்து உங்கள் கோரிக்கைக்கு கேரள அரசு முழு உறுதுணையாக இருக்கும். உரிமைகளைப் பெற துணையிருப்போம்” என்றார். அங்கிருந்து 3-ம் தேதி சென்னைக்கு வந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்திப்பதற்காகச் சென்ற பயணக் குழு, காக்கவைக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேதாபட்கர், பிஆர்.பாண்டியன் ஆகியோர், “விவசாயிகளைச் சந்திக்க மறுத்து காக்கவைத்து திருப்பி அனுப்பியது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல. இது இந்தியாவில் போராடுகிற விவசாயிகளை அவமானப்படுத்துகிற செயல். இதனை வன்மையாக எச்சரிக்கிறேன்.
இது ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும் அவமதிக்கும் செயலாகும். தமிழக முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவிருக்கிறோம் என்பதை 15 தினங்களுக்கு முன்னதாகவே உரிய முறையில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்திருந்தோம். கடிதங்களும் அளித்திருந்தோம்.

இதையடுத்து அனைவரும் நேரடியாக அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் அங்கு இருப்பதாக அறிந்து சந்தித்து எடுத்துரைப்பதற்காகச் சென்றோம். காவல்துறை அதிகாரிகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதாகவும், விரைவில் அழைப்பார் எனவும் தெரிவித்து சிறிது நேரம் வாசலில் வெய்யிலிலேயே காக்கவைத்தனர். பின்னர் முதல்வர் வேறு வழியில் சென்றுவிட்டதாகக் கூறினார்கள்.
தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு எட்டுவழிச் சாலை திட்டம், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட மண்டலத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட பெட்ரோலிய ரசாயன மண்டலமாக மாற்ற முயல்வதையும், வீராணத்தில் நிலக்கரி எடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அம்பலப்படுத்தி வருகிறோம். அதே போல, பரந்தூர் விமான நிலையம் என்கிற பேரில் கார்ப்பரேட்டுகளுக்கு விளைநிலங்களை தாரைவார்க்க முயல்வதையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

ஒட்டுமொத்த தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து தோலுரித்துக் காட்டி வருகிறோம். இதற்கு அச்சுறுத்தலை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கோடு முதலமைச்சர் இதுமாதிரி செயலில் ஈடுபட்டாலும், இனி துணிவோடு களமிறங்கி போராடுவதில் எந்த சமரசத்துக்கும் இடம் இருக்காது” என்றனர்.
பின்னர் அங்கிருந்து பயணத்தைத் தொடங்கிய விவசாயிகள் 4-ம் தேதி ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்திக்க முயன்றனர். ஆனால், ஆந்திர மாநில அரசின் சார்பில் விசாகப்பட்டினத்தில் 3,4,5-ம் தேதிகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அந்த மாநில முதல்வர் பங்கேற்றதால், அவரால் விவசாயிகளைச் சந்திக்க முடியவில்லை.

இதையடுத்து முதல்வர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கை கடிதங்களை வழங்கினர். 8-ம் தேதி சத்தீஸ்கர் சென்றனர். அங்கு அந்த மாநில முதல்வர் பூபேஷ் பாகலைச் சந்தித்தனர். அப்போது பேசிய முதல்வர், “என்னுடைய முழு ஆதரவைத் தருகிறேன். உங்களது பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து 9-ம் தேதி ஒடிசா மாநிலம், புவனேஸ்வரம் சென்றடைந்தது இந்தக் குழு. ஒடிசா மாநில முதல்வரின் சார்பில் வேளாண்துறை அமைச்சர் சுவைன், விவசாயிகளின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர், “கிசான் யாத்திரையில் முன் வைத்திருக்கும் கோரிக்கைகளை ஒடிசா அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

மத்திய அரசை நாங்களும் இந்தக் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசோ தொடர்ந்து ஏமாற்றி வருவது வருத்தமளிக்கிறது. வேளாண் வளர்ச்சிக்கான மானியங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் குறைத்து வருகிறது. அதனை ஈடுசெய்யும் வகையில், நாங்கள் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை கூடுதலாக்கியிருக்கிறோம்.
எனவே பயணத்தில் இடம்பெற்றிருக்கும் கோரிக்கைகளை ஒடிசா அரசு முழுமையாக ஆதரிக்கிறது. நாங்களும் வலியுறுத்துவோம்” என்றார். இந்தக் குழு கொல்கத்தா, பாட்னா, வாரணாசி, ஜெய்பூர், சண்டிகர் வழியாக வரும் 20-ம் தேதி டெல்லி சென்றடைகிறது.