மத்தியப் பிரதேசம்: அரசு பெண் ஊழியர்களுக்கு 7 விடுமுறை நாள்கள் அதிகரிப்பு; மொத்தம் 20 நாள்கள்!

நாட்டில் ஒவ்வொரு மாநிலமும் அரசு பெண் ஊழியர்களுக்கு கேஷுவல் விடுமுறை (Casual Leave) தினங்களை அதிகரித்துக் கொடுத்துள்ளன. பெண்களுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் பொறுப்புகள் அதிகமாக இருப்பதால் இவ்வாறு பெண் ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு 13 நாள்கள் கேஷுவல் விடுப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதனை 20 நாள்களாக அதிகரித்து முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், `பெண்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்வதோடு வீட்டுப் பொறுப்புகளையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதோடு தங்களது பணியிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே அரசு பெண் ஊழியர்களுக்கு கூடுதலாக 7 நாள்கள் கேஷுவல் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், `பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுதான் என் வாழ்க்கையின் முக்கிய நோக்கம். பெண்களை முன்னேற்றுவதன் மூலம் மாநிலமும், நாடும் முன்னேறும் என்று நம்புகிறேன். தொழில் கல்வி நிறுவனங்களில் படிக்கும் பெண்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படுவதோடு, வேலை வாய்ப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்படும்.

ஐடிஐ படிக்கும் பெண்களுக்கு டிஜிட்டல் மற்றும் நிதித்துறையில் 80 மணி நேரம் சிறப்பு பயிற்சி கொடுக்கப்படும். இது தவிர திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் கொடுக்கப்படும்’ என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அரசு பெண் ஊழியர்களுக்கு விடுமுறை நாள்களை அதிகரித்து இருப்பது குறித்து தலைமைச் செயலக தொழிற்சங்க தலைவர் ஆனந்த் பட் கூறுகையில், ’அரசு விடுமுறையை அதிகரிப்பதற்கு பதில் வேலை செய்யும் இடத்தின் சூழ்நிலை சிறப்பாக அமைய தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

பெண்கள்…

ஹரியானா அரசு பெண்களுக்கு 20 நாள்கள் கேஷுவல் விடுமுறை கொடுத்திருக்கிறது. ஆண்களுக்கு இது 10 தினங்கள் ஆகும். இதே போன்று பஞ்சாப் மற்றும் ஆந்திராவிலும் பெண்களுக்கு 20 நாள்கள் கேஷுவல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் அரசு அலுவலகத்தில் வாரத்தில் 5 நாள்கள் மட்டும் வேலை நாட்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.