பீஜிங், சீன அரசியலில் வரலாறு படைக்கும் விதமாக, அந்நாட்டின் அதிபராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்ட ஷீ ஜின்பிங், 69, நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
நம் அண்டை நாடான சீனாவில், ஒற்றை அரசியல் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், இந்நாட்டு அதிபர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
இதன்படி, சீனாவின் அதிபராக ஷீ ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவை அப்படியே ஏற்றுக்கொள்ளும் அந்நாட்டு பார்லி.,யான தேசிய மக்கள் காங்கிரஸ், ஷீ ஜின்பிங்கை அதிபராக தேர்வு செய்ததை அடுத்து, இங்குள்ள 3,000 உறுப்பினர்களும், இவர் அதிபராக ஆதரவு அளித்தனர்.
இதையடுத்து, பார்லி.,யில் நடந்த நிகழ்ச்சியில் அதிபராக ஷீ ஜின்பிங் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
சீனாவின் ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மாவோவுக்குப் பின், இரண்டு முறைக்கு மேல் சீன அதிபரான முதல் நபர் என்ற பெருமையை ஷீ ஜின்பிங் பெற்றுள்ளார்.
ஏற்கனவே இரண்டு முறை ஐந்தாண்டு கால ஆட்சியை இவர் பூர்த்தி செய்த நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவாக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், அக்கட்சியின் பொதுச் செயலராக இவர் தேர்வாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும் என்ற வரம்பை, கடந்த 2018ல் ஷீ ஜின்பிங் நீக்கியதால், இதன் வாயிலாக ஓய்வு பெறும் வரை அல்லது இறக்கும் வரை இவரே சீனாவை ஆட்சி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன பார்லி.,யின் தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை அதிபராக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சீன பிரதமரான லி கெகியாங்கின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து, அதிபருக்கு மிகவும் நெருக்கமானவரான லி கியாங், இந்நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குகையில் துாங்கியவர்
சீனாவின் சக்தி வாய்ந்த தலைவராக உள்ள ஷீ ஜின்பிங், தன் ஆரம்ப கால வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை கடந்து, அரசியல் பாதையில் நுழைந்துள்ளார். சிறு வயதில் இருந்தே சுயாட்சி குறித்த சிந்தனையுடன் வளர்ந்த இவர், தன் 15 வயதில், மத்திய சீனாவின் கிராமப்புறங்களில் உள்ள குகை வீடுகளில் தங்கியிருந்துள்ளார். அவர் துாங்கிய குகை, தற்போது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. 1974ல் கிராமத்தின் சீன கம்யூ., கட்சித் தலைவராகத் துவங்கி, மாகாணத்தின் ஆளுனர், கட்சித் தலைவர் போன்ற பதவிகளைத் தாண்டி, தற்போது சீனாவின் உச்சபட்ச அதிகாரத்தில் அமர்ந்துள்ளார்.
சவால் என்ன?
l மந்தமான நிலையில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.l அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் சூழலில், இதை சரி செய்ய நடவடிக்கைகள் தேவை.l தைவானின் அச்சுறுத்தல்களைசமாளிக்க வேண்டிய நெருக்கடி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்