புதுடில்லி, ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுவது வருத்தம் அளிப்பதாக, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிசிடம், பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.
இதையடுத்து, ”இந்திய சமூகத்தினரின் பாதுகாப்புக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்,” என, ஆஸி பிரதமர் உறுதி அளித்தார்.
ஒப்பந்தம்
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவருக்கு, புதுடில்லியில் நேற்று முன்தினம் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி, ஆஸி., பிரதமர் அல்பானிஸ் ஆகியோர் நேற்று சந்தித்து, நான்கு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
ஆஸ்திரேலியாவில் கோவில்கள் மீது அடிக்கடி தாக்குல்கள் நடத்தப்படுவது அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக ஆஸி., பிரதமரிடம் தெரிவித்தேன்.
இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்த முழு ஒத்துழைப்பை அளிக்க தயாராக உள்ளதாகவும் ஆஸ்திரேலிய பிரதமர் உறுதி அளித்தார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இந்தியா- – ஆஸ்திரேலியாவின் விரிவான கூட்டுறவின் முக்கிய துாணாக உள்ளது.
இந்தோ – -பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்தோம்.
ராணுவத்தில் கடந்த சில ஆண்டுகளில், பரஸ்பர ராணுவ தளவாட ஆதரவு உட்பட குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை செய்துள்ளோம்.
இருநாட்டு பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே வழக்கமான மற்றும் பயனுள்ள தகவல் பரிமாற்றம் உள்ளது. இதை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியதாவது:
இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததன் வாயிலாக, இரு நாடுகளின் பொருளாதார உறவு வலுபெற்றுள்ளது குறித்து பிரதமர் மோடியும், நானும் விவாதித்தோம்.
இரு நாடுகள் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.
இந்த ஆண்டுக்குள் அந்த பணி முடிவடையும் என நம்புகிறேன்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உறவு பன்முகத்தன்மை உடையது.
வருகிற மே மாதம், ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள, ‘குவாட்’ தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை வரவேற்க தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
உறுதி
சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற பாதுகாப்பு சூழல், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ராணுவ மற்றும் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது, இந்தோ – பசிபிக் கடல் பிராந்தியத்தில் ஸ்திரமான பாதுகாப்பை ஏற்படுத்த உழைப்பது குறித்து மோடியும், நானும் உறுதி ஏற்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன்பின், புதுடில்லி ஐ.ஐ.டி., யில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸி., பிரதமர் பேசுகையில், ”சர்வதேச அளவில் தெற்கு பிராந்தியத்துக்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கான தனித்துவமான சிறப்பை இந்தியா பெற்றுள்ளது.
”பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களுக்கு இந்தியாவை மையப்படுத்தித் தான் தீர்வு காண முடியும்,” என்றார்.
4 ஒப்பந்தங்கள்!
விளையாட்டு, புதிய கண்டுபிடிப்புகள், ஒலி – ஒளி தயாரிப்பு, சூரிய சக்தி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்கள் இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.ஒலி — ஒளி தயாரிப்பு ஒப்பந்தம் வாயிலாக, இரு நாட்டு படப்பிடிப்பு குழுவினர் பரஸ்பரம் அந்தந்த நாட்டிற்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது, அதற்கு ஏற்படும் 30 சதவீத செலவை, சம்பந்தபட்ட அரசே ஏற்றுக் கொள்ளும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்