பெங்களூரு, பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் திடீரென தீப்பற்றி எரிந்ததில், பஸ்சுக்குள் துாங்கிக் கொண்டிருந்த கண்டக்டர் உடல் கருகி உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் கதக் நகரைச் சேர்ந்தவர் முத்தய்யசாமி, 45; பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழக கண்டக்டர்.
நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து பெங்களூரு பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தப்பட்டது.
மறுநாள் அதிகாலை பணி என்பதால், கண்டக்டர் முத்தய்யசாமி, டிரைவர் பிரகாஷ், 39 ஆகிய இருவரும் பஸ்சுக்குள்ளேயே துாங்கினர்.
நேற்று அதிகாலை 4:30 மணிக்கு டிரைவர் பிரகாஷ் எழுந்து கழிப்பறைக்குச் சென்றார். அந்த நேரத்தில் பஸ் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது. பஸ்சுக்குள் கரும்புகை சூழ்ந்தது.
ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்னையால் அவதிப்பட்ட முத்தய்யசாமி, பஸ்சுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். இருக்கையில் படுத்த நிலையிலேயே எரிந்து, அவர் உடல் கருகியது.
கழிப்பறைக்கு சென்றதால், அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து, முத்தய்யசாமி உடலை மீட்டனர்.
பேடரஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
முத்தய்யசாமி குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடும்; குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்