திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நித்யா என்பவர் தனது மகன் மற்றும் மகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி திருச்சி கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார். ஆனால், அதற்கு திருச்சி மாவட்ட கோட்டாட்சியர் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து நித்யா சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

அப்போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, “மனுதாரரின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்து திருச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் உத்தரவுகள் மிக தெளிவாக இருந்தும் எந்த விதமான காரணமும் இல்லாமல் சாதிச்சான்றிதழ் கோரிய மனுவை நிராகரித்த மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.
மேலும் மனுதாரரின் மனுவை பரிசீலித்து, சட்டத்தின் படி சாதி சான்றிதழ்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோட்டாட்சியருக்கு விதிக்கப்பட்ட 10,000 ரூபாயை மதுரை இலவச சட்ட உதவிகள் மையத்திற்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.