கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் முருக்கம்பாடி, சித்தப்பட்டிணம், திருவரங்கம், ஜம்படை, சீர்பனந்தல், சிறுபனையூர் ஆகிய ஊராட்சிகளில் ‘மக்களைத் தேடி’ மனுக்கள் பெறும் முகாம் நேற்று நடைபெற்றது.
இம்முகாம்கள், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில், எம்எல்ஏக்கள் தா.உதயசூரியன், வசந்தம்.க.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.
இந்த முகாம்களில் 1,931 மனுக்களை பெற்ற அமைச்சர், “மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து, தகுதியான மனுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். தகுதியற்ற மனுக்களுக்கு உரிய பதிலினை வழங்கிட வேண்டும்” என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து 184 பயனாளிகளுக்கு கோரிக்கைக்கேற்ப தீர்வு கண்டு, அதற்கான ஆணையை வழங்கினார். தொடர்ந்து அமைச்சர்பேசுகையில், “எஞ்சி உள்ளவர்களின் மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காணப்படும். தீர்வு காண முடியாத மனுதாரர்களுக்கு அதற்கான விளக்கத்துடன் கடிதம் அளிக்கப்படும். மனு என்னவானது என்ற கவலை வேண்டாம்” என்று தெரிவித்தார்.
அப்போது வயதானவர்கள் சிலர், பலமுறை மனு அளித்தும் தீர்வு ஏற்படவில்லை. அமைச்சரிடம் கொடுக்கும் மனுவுக்காவது தீர்வு கிடைக்குமா என ஏக்கத்துடன் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலரும், அவரது உதவியாளரும், “மந்திரிகிட்ட மனு கொடுத்தாலும் மணியகாரர்கிட்டத் தான்வந்து சேரணும் அதனால், வந்தோம் மனுவை கொடுத்தோம்…என இருக்க வேண்டும்” என மனுதாரர்களை கட்டுப்படுத்தினர்.
இவ்வாறு வேறு சில விஏஓ-க்களும் கூறியது மனுதாரர்களை கவலையடைச் செய்தது. இந்நிகழ்வு, மனுதாரர்களை கிராம நிர்வாக அலுவலர்கள் எவ்வாறு நடத்துகின்றனர் என்பதை வெளிப்படுத்தியது.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்டவருவாய் அலுவலர் சு.சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரா.மணி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெ.யோகஜோதி உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.