பீஜிங் :நம் அண்டை நாடான சீனாவின் பிரதமராக, அதிபர் ஜின்பிங்கின் தீவிர விசுவாசியான லி கியாங் நியமிக்கப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான சீனாவில், அதன் அதிபர் ஷி ஜின்பிங்கின் நம்பிக்கைக்கு உரியவரான லி கியாங், 63, பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். சீன பார்லிமென்ட் அலுவலகம் இதற்கான உத்தரவை நேற்று வெளியிட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக சீன பிரதமராக இருந்த லி கெகியாங்கின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு நேற்று கூடியது.
அதிபர் ஷி ஜின்பிங், தன் நம்பிக்கைக்கு உரிய லி கியாங்கை முன்மொழிந்தார். மொத்தம் உள்ள 2,947 செயற்குழு உறுப்பினர்களில், 2,936 பேர் லி கியாங்குக்கு ஓட்டு அளித்தனர்.
இதையடுத்து, லி கியாங் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதற்கான உத்தரவில், அதிபர் ஷி ஜின்பிங் கையெழுத்திட்டார்.
புதிய பிரதமரான லி கியாங், ஜிஜியாங் மாகாணத்தின் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.
ஜின்பிங்கின் நெருங்கிய நண்பராகவும், அவரது விசுவாசியாகவும் திகழ்ந்தார்.ஜின்பிங் வெளிநாட்டு பயணங்களில் தவிர்க்க முடியாத நபராக உடன் சென்றவர்களில் லி கியாங் முக்கியமானவர். தனியார் நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி தருவது மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் லி கியாங் நிபுணர் என கூறப்படுகிறது.
கொரோனா காலத்தில் சீனாவின் வர்த்தக தலைநகரான ஷாங்காயில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து, மக்களை துன்புறுத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.
கொரோனா தொற்று பரவலுக்கு பின் கடுமையாக சரிந்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய பிரதமர் லி கியாங் பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பார் என கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement