புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் 2021-22ம் ஆண்டில் தங்கள் கட்சியின் மொத்த வருமானம் குறித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அண்மையில் அளித்தன. அதன் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “2021-22ம் ஆண்டில் பாஜ, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசிய மக்கள் கட்சி ஆகிய 7 கட்சிகள் ரூ.2 ஆயிரத்து 172 கோடி ரூபாய் பெற்றுள்ளன. அந்த தொகையில், ரூ. ஆயிரத்து 811.94 கோடி, அதாவது 83.41 சதவீதம் தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கிடைக்க பெற்றுள்ளன. 2021-22ம் ஆண்டில் அறியப்படாத நபர்களின் வழியாக பாஜவுக்கு ரூ.ஆயிரத்து 161 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதுமற்ற கட்சிகளின் வருமானத்தில் 53.45 சதவீதமாகும். மேலும் அறியப்படாத நபர்கள் மூலம் பிற கட்சிகள் பெற்ற வருமானத்தை விடவும் ரூ.150 கோடி அதிகம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.